பொது

ஆழிப்பேரலை; 20 ஆண்டுகள் கடந்தாலும் அதன் தாக்கத்தை மறக்க முடியவில்லை

20/12/2024 07:55 PM

நாகப்பட்டினம், 20 டிசம்பர் (பெர்னாமா) - 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி... 

சுனாமி எனப்படும் ஆழிப்பேரலை தாக்கி இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து உட்பட மேலும் பல நாடுகளில் சுமார் இரண்டு லட்சத்து 30,000 பேர் மாண்டனர்.

இந்தோனேசியா ஆச்சே அருகே, ரிக்டர் அளவைக் கருவியில் 9.1ஆக பதிவான வலுவான நிலநடுக்கத்தால் இந்தியப் பெருங்கடலில் ஆழிப்பேரலை ஏற்பட்டது.

இந்த இயற்கை பேரிடர் ஏற்பட்டு 20 ஆண்டுகள் கடந்தாலும் அதன் தாக்கத்தை பாதிக்கப்பட்டவர்களால் இன்னும் மறக்க முடியவில்லை.

குறிப்பாக, தமிழ்நாடு சென்னையில் உள்ள மக்களில் பலரும் ஆழிப்பேரலையால் கடுமையான  தாக்கத்தை எதிர்நோக்கியதாக கூறுகின்றனர்.

"சுனாமி என்ற பேரைக் கேட்டாலே உடலெல்லாம் நடுங்குகிறது. அந்த ஞாபகம் வந்தாலே மனதிற்கு மிகவும் கவலையாக உள்ளது," என்று அதில் பாதிக்கப்பட்ட காண்டா என்பவர் குறிப்பிட்டார். 

அந்த பேரழிவைத் தொடர்ந்து நில அதிர்வு மற்றும் ஆழிப்பேரலை குறித்த தகவல் மையங்களை நிறுவுவதற்கும் கடற்கரையோரத்தில் எச்சரிக்கை கோபுரங்களை அமைப்பதற்கும் லட்சக்கணக்கான டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளன.

"சுனாமி பாதிப்பிலிருந்து இப்போது ஓர் அமைதியான வாழ்க்கை கிடைத்துள்ளது. ஏனெனில் கடற்கரையிலிருந்து சற்று தொலைவில் பாதுகாப்பான வீட்டில் இப்போது இருக்கிறோம். அதனால் இயற்கை பேரிடரிலிருந்து தப்பித்து கொள்வதற்கான வழிவகை தற்போது அமைந்துள்ளது," என்று அதில் பாதிக்கப்பட்டவரான ஞானமணி என்பவர் கூறினார். 

"இப்போதெல்லாம் கடல் அமலாக்கத் தரப்பினர் கூறும் அறிவுரையை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். எங்களுக்கு நடைபேசி வழங்கப்படுள்ளது. அதன் மூலமாக தெரியும் அறிகுறிகளைப் பின்பற்றியே நாங்கள் கடலுக்குள் செல்வோம். இல்லையே எங்களின் படகும் சேதமாவதோடு, உயிருக்கும் ஆபத்து ஏற்படும்," என்று தவமணி என்பவர் தெரிவித்தார். 

மேலும், வலுவான பேரிடர் நிர்வகிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை அமைப்பையும் இந்திய அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)