பொது

ஆசியான் TROIKA-இல் கலந்துகொள்ள பேங்காக் சென்றுள்ளார் தொக் மாட்

20/12/2024 04:23 PM

கோலாலம்பூர், 20 டிசம்பர் (பெர்னாமா) - தற்போது தாய்லாந்து, பேங்காகில் நடைபெறும் ASEAN TROIKA அதிகாரப்பூர்வமற்ற கலந்தாலோசிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற கலந்தாலோசிப்பில் வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் கலந்து கொண்டார்.

2023-ஆம் ஆண்டு ஆசியான் தலைவர்களால் அமைக்கப்பட்ட ASEAN TROIKA செயல்முறை மியன்மார் நெருக்கடியைக் கையாள்வதில் தொடர்ச்சியான வழிகளை உறுதி செய்வதற்காக தற்போதைய கடந்த கால மற்றும் எதிர்கால ஆசியான் தலைவர்களை உள்ளடக்கியதாகும்.

இந்தோனேசியா, லாவோஸ் மற்றும் மலேசியாவும் தற்போது TROIKA-இல் இணைக்கப்பட்டுள்ளன. 

இந்த அதிகாரப்பூர்வமற்ற கலந்தாலோசிப்பு, 5 PC எனப்படும் ஐந்து அம்ச கருத்தொற்றுமையை நடைமுறைப்படுத்துவதில் TROIKA உறுப்பினர்களிடையே ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதாக விஸ்மா புத்ரா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

அதோடு, மியான்மாரில் அமைதியான மற்றும் நிலையான தீர்வைக் கண்டறிவதற்கான 5PC குறித்த ஆசியான் தலைவர்களின் ஆய்வும் முடிவும் அதில் உட்படுத்தப்பட்டுள்ளன. 

ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் பிற ஆசியான் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட விரிவாக்கம் கண்ட அதிகாரப்பூர்வமற்ற கலந்தாலோசிப்பில், மியான்மரில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க ஆசியானின் ஒட்டுமொத்த முயற்சிகள் மற்றும் 5PC அமலாக்கத்தின் திசை குறித்து கலந்துரையாடப்பட்டது.

2025-ஆம் ஆண்டு ஆசியானுக்கு தலைமையேற்கும் மலேசியா, மியான்மார் மோதலைச் சமாளிக்கும் அணுகுமுறையையும் சமர்ப்பித்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)