பொது

போலியான முதலீட்டுத் திட்டமா? - ஏழு நண்பர்கள் மறுப்பு

20/12/2024 04:47 PM

பாலிக் பூலாவ், 20 டிசம்பர் (பெர்னாமா) - இம்மாத தொடக்கத்தில் போலியான முதலீட்டு திட்டத்தை வழங்கியதாக தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஏழு நண்பர்கள் இன்று பாலிக் பூலாவ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மறுத்து விசாரணைக் கோரினர்.

மாஜிஸ்திரேட் சியா ஹுவே திங் முன்னிலையில் இக்குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது 26 முதல் 33 வயதிற்குட்பட்ட அவர்கள் அனைவரும் அதனை மறுத்தனர்.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 420-க்கு எதிராக முகநூல் மற்றும் புலனம் மூலம்,  Multiply Finance எனும் போலியான நிதி முதலீட்டு திட்டத்தில் மக்களை முதலீடு செய்யும்படி ஏமாற்றியதாக வோங் யு தெங், லிம் யொங் ஔன், சின் சூன் ஸி, ஓங் இ சூன், சோ வீ  ஜென், ஜெரெமி தியா லா ஜின் மற்றும் சியோங் வெய்மொன் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி இரவு 10.15 மணிக்கு பாயான் லெப்பாஸ், தாமான் ஶ்ரீ பாயான் லெப்பாஸில் உள்ள The Clovers அடுக்குமாடி குடியிருப்பில் அவர்கள் இக்குற்றத்தைப் புரிந்துள்ளனர்.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 120பி உட்பிரிவு இரண்டின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.

அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிபட்சம் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

குற்றச்சாட்டப்பட்ட அந்த எழுவரையும் தலா ஐந்தாயிரம் ரிங்கிட் ஜாமீன் தொகையுடன் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு அடுத்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)