கோலாலம்பூர், 20 டிசம்பர் (பெர்னாமா) - மலேசிய தேசிய ஆசிரியர் சேவை சம்மேளனம், என்.யு.டி.பி-இன் கீழ் பதிவு செய்திருக்கும் இரண்டு லட்சத்து முப்பதாயிரம் ஆசிரியர்களில் சுமார் 40 விழுக்காட்டினர் மட்டுமே அச்சம்மேளனம் வழங்கும் காப்புறுதி திட்டத்தில் இணைந்துள்ளனர்.
எந்தவொரு விபத்து அல்லது பேரிடரில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்தை அத்திட்டம் கொண்டிருந்தாலும் காப்புறுதி பங்களிப்பின் முக்கியத்துவம் தொடர்பான ஆசிரியர்களின் விழிப்புணர்வு நிலை இன்னும் குறைவாகவே இருப்பதை காட்டுவதாக என்.யு.டி.பி-இன் தலைவர் அமினுடின் அவாங் தெரிவித்தார்.
என்.யு.டி.பி-இன் கீழ் வழங்கப்படும் காப்புறுதி திட்டத்திற்கான கட்டணம் மிகவும் குறைவு என்று கூறிய அமினுடின், மாதந்தோறும் ஐந்து ரிங்கிட் பிடித்தம் செய்யப்படும் என்று குறிப்பிட்டார்.
ஒருவேளை அவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் இக்காப்புறுதியின் மூலமாக இரண்டு லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட்டிற்கும் மேலான நன்மைகளை அவர்களால் பெற முடியும் என்றும் அவர் விவரித்தார்.
இதனிடையே, தற்போது ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் அச்சம்மேளனத்தில் பதிவு செய்யும்படியும் அமினுடின் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)