கோத்தா பாரு, 20 டிசம்பர் (பெர்னாமா) - நேற்று கிளந்தான், ஜாலான் ஜெலியில் இருந்து டாபோங் நோக்கிச் செல்லும் சாலையின் பத்தாவது கிலோமீட்டரில் அவ்வழியே சென்ற நாய் ஒன்றை மோதாமல் தவிர்க்க முற்பட்ட போலீஸ் ரோந்து வாகனத்தை மோதிய மோட்டார் சைக்கிளோட்டி படுகாயத்திற்கு உள்ளானார்.
நேற்றிரவு மணி 9.30 அளவில் கோலா பாலாவிலிருந்து ஜெலி நோக்கிச் சென்ற அந்த போலீஸ் ரோந்து கார், சாலையின் இடது பக்கத்திலிருந்து குறுக்கே வந்த நாயை மோதாமல் தவிர்க்க முற்பட்டபோது காரின் பின்புற வலது பக்கத்தில் அந்த மோட்டார் சைக்கிளோட்டி மோதியதாக ஜெலி மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரின்டென்டன்சாரி யாக்கோப் தெரிவித்தார்.
1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்து சட்டம் செக்ஷன் 43 உட்பிரிவு ஒன்றின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதாக அவர் கூறினார்.
இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள் விசாரணைக்கு உதவும் வகையில் 09-944 0222 எண்ணில் ஜெலி மாவட்ட போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)