கோலாலம்பூர், 21 டிசம்பர் (பெர்னாமா) - கடந்த வாரம் கிளந்தான் மற்றும் கோலாலம்பூரில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கைகளின் மூலம் இணையம் வழி போலி ஆயுதங்கள் விற்பனை மற்றும் முறையான அனுமதியின்றி வனவிலங்குகளை வைத்திருந்த நடவடிக்கைகளைப் புக்கிட் அமனானின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது அமைதி துறை, கே.டி.என்.கே.ஏ முறியடித்தது.
டபல்யூ.சி.பி எனப்படும் வனவிலங்கு குற்றவியல் கட்டுப்பாட்டு பிரிவு மேற்கொண்ட உளவின் அடிப்படையில் அளிக்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து, அவ்விரு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக, இன்று வெளியிட்ட அறிக்கையில் கே.டி.என்.கே.ஏ இயக்குநர் டத்தோஸ்ரீ ஆஸ்மி அபு காசிம் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை கோத்தா பாருவில் மேற்கொள்ளப்பட்ட முதல் சோதனை நடவடிக்கையில் முறையான அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 32 போலி துப்பாக்கிகள் மற்றும் முராய் பத்து இனத்தைச் சேர்ந்த இரு பறவைகளைப் போலீசார் கண்டுபிடித்ததை அடுத்து ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அதோடு சுகாதார அமைச்சின் அனுமதியைப் பெறாத மருந்துகள் அடங்கிய சில பெட்டிகளையும் தமது தரப்பு கண்டெடுத்ததாக டத்தோஸ்ரீ ஆஸ்மி கூறினார்.
அவ்வாடவர் கடந்த சில மாதங்களாக இணையம் மூலமாக போலி ஆயுதங்களை விற்பனை செய்து வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த புதன்கிழமை கோலாலம்பூர், ஜாலான் ராஜா லாவுட்டில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சோதனை நடவடிக்கையில், முறையான அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 637 போலி துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதோடு உள்நாட்டவர் ஒருவரும் அந்நிய நாட்டவர் ஒருவரும் கைது கைது செய்யப்பட்டனர்.
இவ்விரு சோதனை நடவடிக்கைகளில் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு நான்கு லட்சத்திற்கும் அதிகம் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.
1960ஆம் ஆண்டு சுடும் ஆயுதம் சட்டம், 2010ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் உட்பட 1984ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களின் கட்டுப்பாடு விதிமுறைகள், 1(a)-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)