கோலாலம்பூர், 21 டிசம்பர் (பெர்னாமா) - நேற்று நள்ளிரவு, கோலாலம்பூர், பண்டார் தாசிக் செலத்தான் எல்ஆர்டி நிலையத்தில் காற்பந்து ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட சண்டை குறித்து புகார் கிடைத்துள்ளதை போலீஸ் உறுதிப் படுத்தியுள்ளது.
நள்ளிரவு 12.03 மணிக்கு, புகார் அளித்த நபர் புக்கிட் ஜாலில் எல்ஆர்டி நிலையத்தில் இருந்து, செந்தூல் திமூருக்குச் செல்லும் வழியில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.
போலீஸ் உறுப்பினராக பணிபுரியும் புகார் அளித்த நபரும் அவரின் நண்பரும் சண்டையைக் கலைக்க முற்பட்டதாக டத்தோ ருஸ்டி முகமட் இசா குறிப்பிட்டார்.
இருப்பினும், இரயிலின் கதவு மூடப்பட்டு அவ்விடத்தை விட்டுச் சென்றதைத் தொடர்ந்து நிலைமைக் கட்டுக்குள் வந்ததாக அவர் விளக்கினார்.
இந்தச் சண்டையால் இரயிலின் கண்ணாடி கதவுகள் சேதமடைந்த வேளை சுமார் 8 நிமிடங்களுக்கு இரயில் சேவை நிறுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குற்றவாளிகளைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் வழங்க முன்வர வேண்டும் என்று போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 147 மற்றும் செக்ஷன் 427இன் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
நேற்றிரவு நடைபெற்ற 2024 ஆசிய கிண்ண காற்பந்து போட்டியின் குழு பிரிவு இறுதி ஆட்டத்தில் மலேசியா சிங்கப்பூருடன் சமநிலை கண்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)