BREAKING NEWS | PM Anwar expresses condolences to the family of Egyptian Islamic movement activist Youssef Nada who passed away today | |
பிரிக்பீல்ட்ஸ், 22 டிசம்பர் (பெர்னாமா) -- நாட்டின் மேம்பாட்டிற்கு ஏற்ப இந்திய சமுதாயமும் அனைத்து நிலையிலும் வளர்ச்சியடைவதை உறுதிசெய்ய, அரசாங்கம் பல்வேறு உதவிகளையும் ஆக்கப்பூர்வ முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.
அம்முயற்சிகளில் ஒன்றாக, நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள 90 வழிபாட்டுத் தலங்களுக்குப் பிரதமர் துறையின் கீழ் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நிதி உதவி வழங்கி இருந்தார்.
அந்நிதியைப் பிரதமரின் பிரதிநிதியாக தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இன்று சம்பந்தப்பட்ட வழிபாட்டுத் தலங்களின் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்தார்.
31 லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட்டை உள்ளடக்கிய இந்நிதி, 88 இந்து ஆலயங்களுக்கும் 2 தேவாலயங்களுக்கும் வழங்கப்பட்டதாக டத்தோ ஶ்ரீ ரமணன் கூறினார்.
''இந்த வருட தொடக்கத்தில் நான் பிரதமரிடம் பேசினேன். கோவில்களுக்கு இதுபோன்ற ஒரு திட்டத்தை நீங்கள் ஆரம்பிக்க வேண்டும் என்று. அதனை பார்த்துக் கொள்ள கே.பி.கே.டி உள்ளது என்று அவர் கூறினார். ஆனால், கே.பி.கே.டி-யின் ஒதுக்கீடு வெறும் கட்டுமானப் பணிகளுக்கு மட்டுமே. கோவில் பூசாரிகளுக்கு சம்பளம் வழங்குவதற்கு அதனை பயன்படுத்தலாம். ஆனால், இந்த ஒதுக்கீடு ஆலயங்களில் மேற்கொள்ளும் திட்டங்களுக்கான ஒரு ஒதுக்கீடு'', என்று அவர் கூறினார்.
அதோடு, நாட்டில் செயல்பட்டு வரும் சில ஆலயங்கள், ROS எனப்படும் சங்கங்களின் பதிவிலாகாவில் இன்னும் பதிவு செய்யப்படாமல் இருக்கும் நிலையில், ஆலய நிர்வாகங்கள் உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு டத்தோ ஶ்ரீ ரமணன் வலியுறுத்தினார்.
இதனிடையே, இந்நிதியைக் கொண்டு ஆலயங்களில் தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அதைப் பெற்று கொண்ட சிலர் பெர்னாமா செய்திகளோடு பகிர்ந்து கொண்டனர்.
''இன்னும் கோவிலுக்கு நிறைய, இப்பொழுது தான் இரண்டு மில்லியன் செலவு செய்தோம். பணம் பற்றாக்குறையாக உள்ளது. அதோடு, பல கடன்கள் உள்ளது. இன்னும் மண்டபங்கள் கட்ட வேண்டும். அதற்கு எட்டு லட்சம் ரிங்கிட் தேவைப்படுகின்றது. அதற்காக தான் பதிவு செய்தோம். கொடுத்தமைக்கு மிக்க நன்றி'' என்றார் சிலாங்கூர் பெஸ்தாரி ஜெயா ஸ்ட்ராத்மோர் தோட்டம் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத் தலைவர் கணேசன் ராமன்.
''இந்த உதவி எங்களுக்கு பெரும் உதவி. ஏனென்றால், நாங்கள் ஆலயத்தைப் புதுப்பிக்க. சில பழுது வேலைகளைப் பார்க்க வேண்டியுள்ளது. மேலிருந்து நீர் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. அதனைச் சரி செய்ய நாங்கள் கண்டிப்பாக இந்தப் பணத்தைப் பயன்படுத்துவோம்'', என்று சிலாங்கூர் ஷா ஆலம் அருள்மிகு ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய தலைவர் கெங்கன் கிருஷ்ணன் கூறினார்.
''இப்பொழுது தான் எங்களை அழைத்தனர். ஒரு இரண்டு வாரங்களுக்கு முன்பு. அவர்கள் சொன்னார்கள் உங்கள் ஆலயமும் இதில் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று. இந்த தொகையை வைத்து அடுத்த திட்டம் பார்த்தோமானால் கோவிலில் மேலும் சில விஷயங்கள் இருக்கின்றது செய்ய வேண்டியது. ஆக, இந்த தொகையை வைத்து நாங்கள் கோவிலில் மேலும் சில திட்டங்களுக்குப் பயன்படுத்துவோம்'', என்று கூறினார் ஜாலான் மஸ்ஜிட் இந்தியா தேவி ஶ்ரீ பத்ர காளியம்மன் ஆலய தலைவர் பார்த்திபன் கண்மனி.
இன்று, கோலாலம்பூர் பிரிக்பீல்ட்சில் உள்ள கலா மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)