BREAKING NEWS   PM Anwar expresses condolences to the family of Egyptian Islamic movement activist Youssef Nada who passed away today | 
 உலகம்

நைஜீரியா: கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் பலி

22/12/2024 05:47 PM

அபுஜா, 22 டிசம்பர் (பெர்னாமா) - நைஜீரியாவில், சனிக்கிழமை நிகழ்ந்த இரு வெவ்வேறு சம்பவங்களில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர்.

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி அவர்கள் உயிரிழந்தனர்.

அவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் சிறுவர்களும் ஆவர்.

நைஜீரிய தலைநகர் அபுஜாவில் மைத்தாமா மாவட்டத்தில் உள்ள புனித திரித்துவம் கத்தோலிக்க தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள் பரிசுப் பொருட்களை வழங்கியபோது கூட்டத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.

அதேவேளையில் அனம்பிரா மாநிலத்தில் உள்ள ஒகிஜா நகரில், அரிசி, தாவர எண்ணெய் மற்றும் பணத்தைப் பெற மக்கள் கூடியபோது மூவர் உயிரிழந்ததை அம்மாநில போலீசார் உறுதிசெய்துள்ள நிலையில், 20 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விரு சம்பவங்களிலும் பலர் காயத்திற்கு ஆளாகினர்.

கடந்த வியாழக்கிழமை இதேபோன்ற சம்பவத்தினால் ஓயோ மாநிலத்தில் குறைந்தது 32 பேர் உயிரிழந்தனர்.

ஆப்பிரிக்காவில், அதிக மக்கள் தொகையைக் கொண்ட அந்நாட்டில், அதிபர் போலா தினுபு அறிமுகப்படுத்திய சீர்திருத்தங்களால் மின்சாரம் மற்றும் எரிபொருளுக்கான உதவித்தொகை குறைந்துள்ளதோடு நாணயத்தின் மதிப்பும் வீழ்ச்சி கண்டுள்ளது.

இதனால் அந்நாடு பல ஆண்டுகளாக மோசமான வாழ்க்கைச் செலவின நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)