BREAKING NEWS | PM Anwar expresses condolences to the family of Egyptian Islamic movement activist Youssef Nada who passed away today | |
கோலாலம்பூர், 22 டிசம்பர் (பெர்னாமா) -- அண்மையில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் கால்கள் துண்டிக்கப்பட்டு, வயிறு பிளந்து கொடூரமான நிலையில் இறந்து கிடந்த பல பூனைகளின் மரணத்திற்குக் காரணமானதாக நம்பப்படும் தெருநாய்களின் தாக்குதலை மறைக்காணியின் பதிவொன்று காட்டியுள்ளது.
கடந்த செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சம்பந்தப்பட்ட உயர்க்கல்விக் கூடத்தில் நிகழ்ந்த இந்த அசம்பாவிதம் குறித்து தமது தரப்பிற்கு இதுவரை மூன்று புகார்கள் கிடைத்துள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முஹமட் இசா தெரிவித்தார்.
சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் இல்லை என்றாலும், தெருநாய்கள் கூட்டமொன்று பலியான பூனைகளைத் தாக்கிய காட்சிகள் சம்பந்தப்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள மறைக்காணியில் பதிவாகியுள்ளது கண்டறியப்பட்டதாக டத்தோ ருஸ்டி கூறினார்.
இவ்விவகாரத்தைப் போலீசார் கால்நடை சேவைத் துறையின் பார்வைக்கு முன்வைத்ததில், இறந்த பூனைகளின் உடலில் இருந்த காயங்கள், தெருநாய் தாக்குதலினால் ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மக்களிடையே பதற்றத்தைத் தவிர்க்க இவ்விவகாரம் தொடர்பில் எந்தவித அனுமானங்களையும் வெளியிட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு ருஸ்டி அறிவுறுத்தினார்.
மேலும், இவ்விவகாரம் குறித்த தகவல் அறிந்தவர்கள் 03-2115 9999 என்ற எண்ணில் கோலாலம்பூர் போலீஸ் நிலையத்திலோ அல்லது அருகிலுள்ள மற்ற போலீஸ் நிலையங்களிலோ தகவல் வழங்குமாறு பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)