பங்சார், 23 டிசம்பர் (பெர்னாமா) -- கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பெருநாட்கால அதிகபட்ச விலை திட்டத்தைப் பின்பற்றாத வியாபாரிகளின் நடவடிக்கையை, கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி தொடங்கப்பட்ட Kita Gempur திட்டம் கட்டுப்படுத்தும்.
அதேவேளையில், வர்த்தகத்தில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையையும் சட்ட மீறலையும் தடுப்பதற்குப் பொது மக்களும் அரசாங்கத்திடம் தகவல்கள் வழங்குவதில் பங்காற்ற வேண்டும் என்று உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ ஶ்ரீ சயூத்தி பாக்கார் தெரிவித்தார்.
Kita Gempur மூலம் கட்டுப்பாட்டு விலையைப் பின்பற்றத் தவறிய வியாபாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும்.
அதோடு, 2011-ஆம் ஆண்டு விலைக் கட்டுப்பாடு மற்றும் இலாப எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் அவர்களைக் குற்றம் சாட்டலாம் என்றும் சயூத்தி குறிப்பிட்டார்.
"இந்த அதிகபட்ச விலை திட்டம் இன்று தொடங்கி ஐந்து நாட்களுக்கு மேற்கொள்ளப்பட்டு, வரும் 27-ஆம் தேதி நிறைவடையும். அதாவது இவ்வாண்டு பெருநாட்கால அதிகபட்ச விலை கட்டுப்பாட்டு திட்டம் கிறிஸ்துமசிற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தொடங்கி கிறிஸ்துமசிற்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர் நிறைவடையும். அது, 14 பொருட்களை உள்ளடக்கியுள்ளது. அவற்றில் 9 தீபகற்பத்திலும் மேலும் 5 பொருட்கள் சபா சரவாக்கிற்கு ஆகும்", என்று அவர் கூறினார்.
இன்று கோலாலம்பூரில், பேரங்காடி ஒன்றை பார்வையிட வருகை புரிந்தபோது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)