கோலாலம்பூர், 23 டிசம்பர் (பெர்னாமா) -- ஐக்கிய அரபு சிற்றரசின், அபு டாபி தேசிய கண்காட்சி மையத்தில் நடைபெற்ற 20-வது உலக சீலாட் வெற்றியாளர் போட்டியில், நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் தாமராஜ் வாசுதேவன்.
ஆடவருக்கான ஃப்ரீ ஸ்டைல் பிரிவின் இறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் விளையாட்டாளரைத் தோற்கடித்த அவர், இந்தத் தற்காப்பு கலையில் உலக அரங்கில் சாதனை படைத்த முதல் இந்தியர் என்ற வரலாற்றையும் படைத்துள்ளார்.
நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில், தாமராஜ் உஸ்பெகிஸ்தான் நாட்டின் குடோய்பெர்டிவ் டியோர்பெக் உடன் களம் கண்டார்.
அதில், தங்கப் பதக்கம் வென்று உலக வெற்றியாளரான தாமராஜ் வாசுதேவன் தமது சொந்த வரலாற்றை உருவாக்கி மலேசியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
பொதுவாக, மலய்க்காரர்களின் ஆதிக்கம் நிறைந்திருக்கும் இந்த சீலாட் விளையாட்டில், இந்தியர் மற்றும் சீனர்களின் ஈடுபாடு குறைவு என்றே கூறலாம்.
அக்கலையைக் கற்று தேர்ந்ததோடு, சீலாட் போட்டிகளின் வழி தமது திறனை நிரூப்பித்துள்ள தாமராஜின் சாதனையை, துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி பாராட்டி, சமூக ஊடகத்தில் தமது வாழ்த்தை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
தாமராஜ் அடைந்த வெற்றியோடு, மலேசிய தேசிய சிலாட் கூட்டமைப்பு, பெசாகாவின் தேசிய அணி இதுவரை ஆறு தங்கம், ஒன்பது வெள்ளி மற்றும் நான்கு வெண்கலப் பதக்கங்களைச் சேகரித்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)