சிரம்பான், 23 டிசம்பர் (பெர்னாமா) -- சந்தைகளில் நியாயமான விலையில் காய்கறிகள் விற்கப்படுகின்ற போதிலும், அதற்கான தேவை மக்கள் மத்தியில் குறைந்து வருவதாக நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழு உறுப்பினர் எஸ்.வீரப்பன் வருத்தம் தெரிவித்தார்.
சீரற்ற வானிலை மாற்றத்தினால் பல்வேறு மாநிலங்களில் காய்கறிகளின் விலை உயர்வு அடைந்திருப்பதாக அறிக்கைகள் வெளிவந்த போதிலும், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் அதன் விலை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அவர் கூறினார்.
வடகிழக்கு பருவ மழைக்காலம் முடிந்தப் பின்னர், அடுத்த ஆண்டில் மார்ச் மாதம் உள்நாட்டு சந்தையில் காய்கறிகளின் விலை மீண்டும் சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு தெரிவித்திருந்ததை, முன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
சீரற்ற வானிலை மாற்றம் காரணமாக தற்போது காய்கறிகளின் விலை அதிகரித்து வருவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே, இவ்வாரம் 25-ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, இன்று தொடங்கி அமல்படுத்தப்பட்டிருக்கும் பெருநாட் கால அதிகபட்ச விலை திட்டம், SHMMP குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தொழில்முனைவு, மனித வளம், பருவநிலை மாற்றம், கூட்டுறவுக் கழகம் மற்றும் பயனிட்டாளர் செயற்குழுத் தலைவரான எஸ்.வீரப்பன் வலியுறுத்தினார்.
''கிறிஸ்துமஸ் தினத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு, கிறிஸ்துமஸ் தினம் அன்று மற்றும் கிறிஸ்துமஸ் முடிந்து இரண்டு நாட்கள் என ஐந்து நாட்களுக்கு விலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்போம். அதற்கு பிறகு, இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். எனவே, இதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்'', என்று அவர் கூறினார்.
இறக்குமதி செய்யப்பட்ட எலும்பு இல்லாத ஆட்டிறைச்சி, இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு, சிவப்பு முள்ளங்கி, இறக்குமதி செய்யப்பட்ட முட்டைக்கோஸ், தக்காளி, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு வெங்காயம், பெரிய மஞ்சள் வெங்காயம் ஆகியவை பட்டியலிடப்பட்ட 9 பொருட்கள் ஆகும் என்றும் அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)