அலோர் காஜா, 24 டிசம்பர் (பெர்னாமா) -- மலாக்கா, அயர் கெரோ ஓய்வெடுக்கும் இடத்திற்கு அருகில் வடக்கு நோக்கிச் செல்லும் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 204ஆவது கிலோமீட்டரில், மூன்று வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில் எழுவர் உயிரிழந்தனர்.
நேற்றிரவு நிகழ்ந்த இவ்விபத்தில் 33 பேர் காயத்திற்கு ஆளாகியதாக மலாக்கா மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை இயக்குநர் முஹமட் பிசார் அசிஸ் தெரிவித்தார்.
27 பயணிகளை ஏற்றி வந்த பேருந்து, டிரேலர், MPV ரக Toyota Estima ஆகிய மூன்று வாகனங்களை உட்டுத்தி இக்கோர விபத்து நிகழ்ந்ததாக முஹமட் பிசார் கூறினார்.
"உயிரிழந்தவர்களின் ஐவர் எஸ்டிமா வாகனத்தில் இருந்தவர்கள். அவர்களில், இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு பெண் குழந்தையாகும். மேலும் இருவரில் ஒருவர் சுற்றுலா வாகன ஓட்டுநர், மற்றொருவர் பேருந்தில் பயணித்த பெண்ணாகும்", என்று அவர் கூறினார்.
சடலங்கள் அனைத்தும் பிரேத பரிசோதனைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
காயமடைந்த 17 பேர் மலாக்கா மருத்துவமனைக்கும், 10 பேர் அலோர் காஜா மருத்துவமனைக்கும், அறுவர் பந்தாய் அயர் கெரோ மருத்துவமனைக்கும் கொண்டுச் செல்லப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு காயங்களுக்கு ஆளாகியுள்ள நிலையில் போலீசார் அவர்களை அடையாளம் காணும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, நேற்றிரவும் 8.45 மணிக்கு இவ்விபத்து குறித்து தீயணைப்புப் படைக்கு அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, 27 உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
இச்சம்பவத்தினால், நெடுஞ்சாலையின் இரு திசைகளிலும் 10 கிலோமீட்டருக்கும் மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)