கோலாலம்பூர், 24 டிசம்பர் (பெர்னாமா) - நாடாளுமன்றத் தொகுதிக்கான ஒதுக்கீட்டை மீட்டுக் கொள்ளும் அரசாங்கத்தின் முடிவை எதிர்ப்பதற்கான சீராய்வு மனுவிற்கு அனுமதி பெறும் நோக்கில் மூவார் நாடாளுமன்ற உறுப்பினர், சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் செய்த விண்ணப்பத்தைக் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
அந்த விண்ணப்பம் காலம் கடந்து செய்யப்பட்டதாகவும், அவ்விவகாரத்தை தீர்மானிக்க தமக்கு அதிகாரம் இல்லை என்றும், நீதிபதி, டத்தோ வான் அகமட் ஃபரிட் வான் சாலே தமது தீர்ப்பில் அறிவித்தார்.
சட்டப்படி கோரப்பட்ட மூன்று மாத காலத்திற்குள் அந்த விண்ணப்பம் தாக்கல் செய்யப்படவில்லை.
அதோடு, ஒதுக்கீடு விவகாரம் என்பது நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்படாத நிர்வாக விவகாரம் என்று, தற்போது மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக இருக்கும் டத்தோ வான் அகமட் ஃபரிட் கூறினார்.
எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்தாலும் அத்தகைய நிதியை அரசாங்க நிறுவனங்களுக்கு ஒதுக்குவதற்கு அரசியலமைப்பில் எவ்வித விதிகளும் இல்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.
இதனிடையே, வழக்கு விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சைட் சாடிக், இன்றைய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருப்பதாக தெரிவித்தார்.
சைட் சாடிக் மற்றும் மூவார் வாக்காளர்களான ,நஜிப் அபு நவார், முகமட் பகிருடீன் அப்துல்லா, மற்றும் முகமட் ஃபட்ஸ்லி பிஸ்ரி ஆகியோர் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அந்த விண்ணப்பத்தைச் செய்திருந்தனர்.
அவர்கள் முறையே முதல் மற்றும் இரண்டாவது பிரதிவாதிகளாக பிரதமர் மற்றும் மலேசிய அரசாங்கத்தைக் குறிப்பிட்டிருந்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)