பொது

இரண்டு ஆண்டுகளில் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்த பிரதமர்

24/12/2024 04:06 PM

ஷா ஆலாம், 24 டிசம்பர் (பெர்னாமா) - பொருளாதாரம், அந்நிய முதலீடுகள், அரசாங்க நிர்வாகம் மற்றும் ஊழலுக்கு எதிரான முயற்சிகள் என்று ஒருமைப்பாட்டு அரசாங்கத்தை வழிநடத்திய இரண்டு ஆண்டுகளில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளார்.

இருப்பினும், அதன் தொடர்பான தகவல்களில், போலிச் செய்திகளும் அவதூறுகளும் கலந்து, சமூக ஊடகங்களில், பரவுவதால், அது அரசாங்கத்தின் அடைவுநிலை மீது எதிர்மறையான தோற்றத்தை உருவாக்குகின்றது.

எனவே, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் இணைந்து அரசாங்கம் குறித்த மக்களின் பார்வையை மாற்றும் கடப்பாட்டை ஏற்க அமைச்சரவை உதவ வேண்டும் என்று தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில்  தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் அப்பொறுப்பை ஏற்க வேண்டும் என்று ஃபஹ்மி ஃபட்சில் வலியுறுத்தினார்.

''அமைச்சர்கள் மட்டுமல்ல, சில சமயங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் கூட. நம்மிடம் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். உதாரணமாக, சில சமயங்களில் நமக்கு பாங்கி நாடாளுமன்ற உறுப்பினரின் குரல் போல இருக்கும். பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், பிரதமரும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்காக்க பிரதமரை மட்டுமே அல்லது அமைச்சர்களை எதிர்பார்க்க முடியாது என்று. நாம் அனைவரையும் ஆதரிப்போம். அனைவரும் ஆட்சி செய்யும் தரப்பின் நாடாளுமன்றத்தை உருவாக்குகிறோம். அதை நாம் ஒன்றாக பகிர்ந்து கொள்ள வேண்டும், '' என்றார் அவர்.

நேற்றிரவு, சிலாங்கூர் தொலைக்காட்சியின் தயாரிப்பில் முகநூல் மற்றும் வலையொளியில் ஒளிபரப்பான அன்வார் இப்ராஹிமின் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் ஈராண்டு நிறைவு என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ஃபஹ்மி ஃபட்சில் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)