இலங்கை, 24 டிசம்பர் (பெர்னாமா) -- 2004-ஆம் ஆண்டில் இலங்கையை உழுக்கிய சுனாமி பேரலைவில் சிக்கிக் கொண்ட சிறு குழந்தை பல்வேறு சிக்கல்களைக் கடந்து தமது பெற்றோருடன் மீண்டும் இணைந்த சம்பவம் உலக மக்களின் கவனத்தை ஈர்த்த ஒன்றாக இருந்தது.
வரும் 26ஆம் தேதியோடு அச்சம்பவம் நிகழ்ந்து 20 ஆண்டுகள் நிறைவடையில் வேளையில், அதன் பிறகு “Baby 81” என்றழைக்கப்பட்ட 20 வயதுடைய அக்குழந்தை, இன்று உயர்ப்பள்ளி பயிலும் மாணவனாக வளர்ந்திருக்கின்றது.
2004-ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட சுனாமியால் 35,000 க்கும் அதிகமானோர் பலியான வேளையில், சிலர் காணாமல் போயுள்ளனர்.
கிழக்கு இலங்கையில் ஏற்பட்ட சுனாமியின் போது 2 மாத குழந்தையாக இருந்த ஜெயராசா அபிலாஷ், நீரில் அடித்து செல்லப்பட்டு வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் மீட்பு குழுவினரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
மேலும், மருத்துவமனையில் 81-ஆவது எண் கொண்ட பதிவேட்டில் அவர் சேர்க்கப்பட்டிருந்தார்.
எனவே தான், “Baby 81” என்ற பெயரில் அவரை அனைவரும் அழைத்து வந்தனர்.
"சிறிய வயதில் இச்சம்பவம் குறித்து என்னிடம் பேசும்போது இது மிக பெரிய விஷயமாக எனக்கு தெரியவில்லை. ஆனால், இது ஒரு பிரமிப்பான விஷயம் என்று பெரியவனாகிய பிறகு தான் தெரியும். அதுவரை, நான் இதை சாதாரண ஒரு அழிவாக தான் நினைத்திருந்தேன். சொல்ல போனால் அதிகமானோர் இறந்து நான் மட்டும் உயிர் பிழைத்தது மிகவும் ஆச்சிரியமாக இருந்தது. கடவுளுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். என்னுடைய பெற்றோர்கள் தான் எனக்கு கடவுள்", என்று ஜெயராசா அபிலாஷ் கூறினார்.
இதனிடையே, இச்சம்பவத்திற்குப் பிறகு மூன்று நாட்களாக குடும்ப உறுப்பினர்களைத் தேடி அலைந்ததாகவும், முதலில் தமது தாய் மற்றும் மனைவியைக் கண்டு பிடித்ததாகவும் ஜெயராசா அபிலாஷின் தந்தை முருகுபிள்ளை ஜெயராசா கூறினார்.
பாதிக்கப்பட்ட மேலும் ஒன்பது குடும்பங்கள் “Baby 81” என்ற குழந்தை தங்களுக்குச் சொந்தமானது என்று தங்களின் பெயர்களை மருத்துவமனையில் சமர்ப்பித்ததால், ஆதாரமின்றி குழந்தையை ஜெயராசா மற்றும் அவரின் மனைவியிடம் ஒப்படைக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டதாக அவர் கூறினார்.
இது குறித்து போலீஸ் புகார் வழங்கப்பட்டு, நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வேளையில், மரபணு பரிசோதனையை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டதாக முருகுபிள்ளை ஜெயராசா மேலும் விவரித்தார்.
"புதினம்பாக்கம் சென்றவர்கள் தங்களின் பிள்ளை என்று அந்த ஆதங்கத்தில் அவர்களின் பெயரைக் கொடுத்து விட்டனர். ஆனால், அவர்கள் போலீஸுக்கும் செல்லவில்லை, நீதிமன்றம் செல்லவில்லை, மரபணு பரிசோதனையும் மேற்கொள்ளவில்லை. உலகம் முழுக்க அறிவிப்பு செய்யப்பட்டது இந்த பிள்ளைக்கு உரிமை கோர மரபணு பரிசோதனை செய்ய யாரெனும் வாருங்கள் என்று. ஆனால், யாரும் வரவில்லை", என்று அவர் கூறினார்.
அபிலாஷுக்கு 12 வயதான போது சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நினைவுக் கூறும் வகையில் தங்கள் வீட்டு முன்புறத்தில் இரு கைகள் இணைவது போல ஒரு சிறிய நினைவிடத்தையும் அவர்கள் அமைத்துள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)