பொது

விபத்திற்கு டிரெய்லர் லாரியின் டயர் கழன்று சாலையில் விழுந்ததே காரணம் - லோக்

24/12/2024 06:22 PM

ஆயர் குரோ, 24 டிசம்பர் (பெர்னாமா) -- நேற்றிரவு, மலாக்கா, ஆயர் குரோ ஓய்வெடுக்கும் இடத்திற்கு அருகில், வடக்கு நோக்கிச் செல்லும் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை, பிளசின் 204-ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த மரண விபத்திற்கு, டிரெய்லர் லாரியின் டயர் கழன்று சாலையில் விழுந்ததே காரணம்.

27 பயணிகளை ஏற்றிச் சென்ற அந்த சுற்றுலாப் பேருந்து டயரில் மோதாமல் தவிர்க்க முயன்றபோது, தடம் மாறி எதிர்திசையில் வந்த இதர மூன்று வாகனங்களை மோதியதாக போக்குவரத்து அமைச்சர், அந்தோணி லோக் தெரிவித்தார்.

விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட டிரெய்லர் மற்றும் பேருந்து நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சாலைப் போக்குவரத்துத் துறை, ஜேபிஜே-விற்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக, லோக் தமது அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், பாதுகாப்பு அம்சங்களைப் பின்பற்றுவதை உறுதிசெய்ய, கனரக வணிக வாகனங்களுக்கு எதிராக கடுமையான மற்றும் ஒருங்கிணைந்த அமலாக்க நடவடிக்கைகளை கேபிஜே தொடர்ந்து மேற்கொள்ளும் என்று அவர் எடுத்துரைத்தார்.

இவ்விபத்தில் பலியான அனைவரின் குடும்பத்தினருக்கும், லோக் தமது ஆழந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)