மலாக்கா, 24 டிசம்பர் (பெர்னாமா) -- வடக்கு நோக்கிச் செல்லும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலை, கிலோமீட்டர் 204-இல் ஐந்து வாகனங்களை உட்படுத்திய விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்களின் குடும்ப உறுப்பினர்களை மலாக்கா மாநில ஆளுநர், துன் முஹமட் அலி ருஸ்தாம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இன்று பிற்பகல் மணி 1.58 அளவில், மலாக்கா மருத்துவமனையின் தடயவியல் மருத்துவத் துறைக்கு சென்ற முஹமட் அலியை, அம்மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஷாரும் முசாகிர் வரவேற்றார்.
அவர், அங்கு ஏறக்குறைய ஒரு மணி நேரத்தை செலவிட்டு, அண்மைய நிலவரங்களையும் கேட்டறிந்தார்.
மலாக்கா மாநில அரசாங்கமும், இவ்விபத்தில் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொண்டது.
எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாமல் இருக்க, சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பாதுகாப்பு அம்சங்களை முழுமையாக கடைப்பிடிப்பதை, கனரக வாகனங்கள் தொடர்பான துறைகளும் நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும் என்று மாநில முதலமைச்சர், டத்தோ ஶ்ரீ அப்துல் ரவுப் யூசோப் வலியுறுத்தினார்.
அதோடு, விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து, ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்ததாக, அவர் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)