பொது

எம்.எச்370 தேடும் முயற்சிகளுக்கு மடானி அரசாங்கம் முழு ஒத்துழைப்பை நல்கும்

25/12/2024 05:39 PM

கோலாலம்பூர், 25 டிசம்பர் (பெர்னாமா) - எம்.எச்370 விமானத்தைத் தேடும் முயற்சிகள் பலனளிக்கும் என்றால் மடானி அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை நல்கும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவாதம் அளித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட அவ்விமானத்தைத் தேடுவதற்கான அவசியம் இருந்தாலும், மக்கள் நிதியும் விவேகமாகப் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

எம்.எச்370 விமானம் ராடாரில் இருந்து மாயமாய் மறைந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் கடந்து விட்ட நிலையில் இன்னும் அதிகமான கேள்விகளும் மர்மங்களும் நீடிப்பதாக பிரதமர் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதன் தொடர்பாக எழும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலைப் பெறுவதற்கான உரிமை அவ்விமானத்தில் இருந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வாரிசுகள் மட்டுமின்றி பொது மக்களுக்கும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனவே, இத்தனை ஆண்டுகளாக காத்திருந்ததற்கான பலனை இந்தத் தேடல் நடவடிக்கை வழங்கினால், அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பு நல்கும் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் கூறினார்.

எம்.எச்370 விமானத்தைத் தேடும் நடவடிக்கையைத் தொடர, தனியார் கடலடி தேடல் நிறுவனமான, ஓஷன் இன்பினிட்டி விடுத்த அழைப்பை டிசம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கொள்கை அளவில் ஏற்று கொண்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)