சிறப்புச் செய்தி

பிள்ளைகள் கைத்தொலைபேசியின் பயன்பாட்டை குறைக்க பெற்றோர்கள் முனைப்பு காட்ட வேண்டும்

25/12/2024 06:45 PM

கோலாலம்பூர், 25 டிசம்பர் (பெர்னாமா) -- சிறார்கள் மத்தியில் கைத்தொலைபேசியின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இதனால், கைத்தொலைபேசியின் வழி தங்களுக்கு தேவையானதை மட்டும் பார்க்காமல், அவர்களின் வயதிற்கு ஏற்புடையாத உள்ளடக்கங்களை பார்க்கும் சாத்தியங்களும் ஏற்படுகின்றன.

இது போன்ற ஆபத்துகளில் இருந்து தங்களது பிள்ளைகளை பாதுகாக்கும் முயற்சியாக, இணையம் வழி, கைத்தொலைபேசியின் பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கையை பெற்றோர்கள் பின்பற்றலாம் என்று தகவல் தொழில்நுட்ப நிபுணர் முனைவர் சஷி குமார் தர்மலிங்கம்.

கல்விக்கு தேவையானவற்றை அறிந்து கொள்ள கைத்தொலைபேசி தற்போது அவசியமாக கருதப்படுகிறது.

அதே வேளையில், கைத்தொலைபேசியின் வழி இணையத்தை பயன்படுத்தும் போது தேவையற்றப் படங்கள், காணெளிகள் மற்றும் தகவல்கள் சிறார்களை வந்தடைவதாக முனைவர் சஷி குமார் தர்மலிங்கம் சுட்டிக் காட்டியுள்ளார்..

இதில் தீவிரவாதம், ஆபாசம் மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடிய தகவல்களும் உள்ளதாக அவர் விளக்கினார்.

''எந்த வழியில் வருகிறது என்பதை பார்த்தால் நிறைய சிறார்கள் தற்போது MESSAGING APPLICATION-ஐ பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதில் அவர்கள் நிறைய பேருடன் தொடர்பில் இருக்கின்றனர். தொடர்பில் இருக்கும் போது யாரெல்லாம் அவர்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள் எந்த நோக்கத்திற்கு கொடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை. சிறார்கள் தற்போது பயன்படுத்தக்கூடிய விளையாட்டில் (GAMES) கூட ஆபாச தன்மை இருக்கக்கூடிய விளம்பரங்களாக வருகிறது,'' என்றார் அவர்.

தொந்தரவு செய்யும் சிறார்களை திசைத் திருப்புவதற்கும் அல்லது அழும் பிள்ளைகளை சமாதப்படுத்துவதற்கும் கைத்தொலைபேசி ஓர் கருவியாகிவிட்டது.

இதுவே நாளடைவில் சிறார்களின் பொழுதுபோக்குக்கு அடிப்படையாக மாறிவிடுவதாக அவர் தெரிவித்தார்.

தங்களது பிள்ளைகள் எவ்வளவு நேரம் கைத்தொலைபேசியை பயன்படுத்துகிறார்கள் என்பதை பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும்.

தற்போது, எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் கைத்தொலைபேசியின் பயன்பாட்டை கட்டுப்படுத்த செயலிகள் இருப்பதாக சஷி குமார் தெரிவித்திருக்கின்றார்.

''ஒரு உதாரணத்திற்கு நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரத்திற்கு அதிகமாக கைத்தொலைப்பேசியை பயன்படுத்த முடியாமல் கட்டுப்படுத்த முடியும். அதன் பிறகு அந்தப் பிள்ளை அந்தக் கருவியைப் பயன்படுத்த முயன்றாலும் அது பயனளிக்காது. எந்த மாதிரியான விஷயங்களை தங்களது பிள்ளைகள் பார்ப்பார்கள், எவற்றை பார்க்கக்கூடாது எனும் தடைகளையும் மென்பொருள் வழியாக செய்ய முடியும். நிறைய PARENTAL CONTROL செயலிகளை பெற்றுக் கொள்ளலாம்,'' என்றார் அவர்.

இதனிடையே, கணினி உட்பட அனைத்து ரக கைத்தொலைபேசிகளுக்கு இது போன்ற செயலிகளை பயன்படுத்த முடியும் என்றாலும் இது குறித்த விழிப்புணர்வை பெற்றோர்கள் கொண்டிருக்க வேண்டும் என்று சஷி குமார் அறிவுறுத்தினார்.

''முதலில் இது போன்ற வாய்ப்புகள் இருப்பதை பெற்றோர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்றக் காரணத்தை இனி பெற்றோர்கள் சொல்ல முடியாது. சிறார்களுக்கு கைத்தொலைப்பேசியைக் கொடுக்கும் போது அதன் உரிமை அவர்களிடம்தான் உள்ளது. அதனைக் கொடுக்கும் போது கட்டுப்பாடுகளை விதிக்கிறேன் என்று சொல்ல வேண்டும்,'' என்றார் அவர்.

சிறார்களில் கற்றல் கற்பித்தலுக்கு கைத்தொலைபேசியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து கணினி அல்லது கையடக்க கணினி உபயோகிக்க பெற்றோர்கள் முயற்சிக்கலாம்.

தங்களது பிள்ளைகளின் நலன் கருதி அவர்களது கைத்தொலைபேசியின் பயன்பாட்டில் பெற்றோர்கள் அக்கறை செலுத்த வேண்டும் என்று சஷி குமார் கேட்டுக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)