கோலாலம்பூர், 25 டிசம்பர் (பெர்னாமா) -- வனவிலங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டிருப்பது உட்பட, சுற்றுச்சூழல் தொடர்பிலான குற்றம் புரிபவர்களுக்கு ஒரு கோடி ரிங்கிட் வரையிலான அபராத விதிப்பு அமலாக்கம் ஆகியவை, இயற்கைவளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சு, NRES-இன் இவ்வாண்டுக்கான முக்கிய அடைவுநிலைகளில் ஒன்றாகும்.
வனவிலங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை தமது தரப்பு அதிகரித்துள்ளதாக அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் தெரிவித்தார்.
2024-ஆம் ஆண்டில் ஆறு கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டில் 1,924 வன பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக நிக் நஸ்மி கூறினார்.
மேலும், நாட்டில் உள்ள மலாயா புலி இனமும் பாதுகாக்கப்படும் வனவிலங்கு பட்டியலில் அடங்குவதை அவர் சுட்டிக்காட்டினார்.
சுற்றுச்சூழல் தர சட்டத்தில் NRES இவ்வாண்டு திருத்தம் மேற்கொண்டதையும் அவர் குறிப்பிட்டார்.
"1974-ஆம் ஆண்டில், இச்சட்ட மசோத இறுதியாகத் திருத்தம் செய்யப்பட்டது. தற்போது, சுற்றுச்சூழல் தொடர்பில் குற்றம் புரிபவர்களுக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரிங்கிட் அபராதம் ஒரு கோடி ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு, ஐந்தாண்டுகள் வரையிலான கட்டாய சிறை தண்டனையும் விதிக்கப்படும்," என்றார் அவர்.
சுற்றுச்சூழல் நிதி பரிமாற்றத்தின் கீழ் கடந்த செப்டம்பர் மாதம் வரை சுமார் மூன்று லட்சத்து 50,000 ஹெக்டர் நிலம் மற்றும் கடல் பகுதிகள் புதிய பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அரசாங்க பதிவேட்டில் பதிவானதாக, இன்று தமது சமூக வலைத்தளத்தில் நிக் நஸ்மி பதிவிட்டுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)