பொது

பினாங்கு: 6 ஆண்டுகளில் 129 வழிப்பாட்டுத் தலங்களுக்கு நிலம்

25/12/2024 06:44 PM

ஜார்ஜ்டவுன், 25 டிசம்பர் (பெர்னாமா) -- 2018-ஆம் ஆண்டு தொடங்கி இவ்வாண்டு வரையில், பினாங்கில் உள்ள இஸ்லாம் அல்லாத 129 வழிப்பாட்டுத் தலங்களுக்கு அம்மாநில அரசாங்கம் நிலம் வழங்கியுள்ளது.

இதர மதங்களைப் பின்பற்றுபவர்களுக்கான வழிபாட்டுத் தலங்களும் முன்னேற்றம் அடையும் பொருட்டு, மாநில அரசாங்கத்தின் முழு ஆதரவை பெற்றுள்ளதை உறுதி செய்வதற்கான, நடவடிக்கை அதுவென்று, முதலமைச்சர் சோவ் கோன் இயோவ் தெரிவித்தார்.

2028-ஆம் ஆண்டு வரை வழிபாட்டுத் தலங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், மாநில ஒருமைப்பாட்டு அரசாங்க தேர்தல் வாக்குறுதியின் வழி ஒரு கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் சோவ் கூறினார்.

மத நல்லிணக்கத்தைப் பேணுவதில் மாநில அரசாங்கம் எப்போதும் அக்கறையையும் முன்னுரிமையையும் கடைப்பிடிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

தேசிய கோட்பாட்டின் அடிப்படையில் ஒவ்வொரு தனிநபரும் அந்தந்த நடைமுறைகள் மற்றும் நம்பிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு அடிப்படை சேவை உட்பட வசதிகளை வழங்குவதில் தமது நிர்வாகம் பாகுபாடற்ற பொறுப்பைக் கொண்டிருப்பதாக சோவ் தெளிவுபடுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)