கோலாலம்பூர், 26 டிசம்பர் (பெர்னாமா) - மொசாம்பிக்கில் நிகழ்ந்து வரும் கலவரத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.
மொசாம்பிக்கில் தங்கியிருக்கும் மலேசியர்கள் 20 பேருடன் தென் ஆப்ரிக்கா, பிரிட்டோரியாவில் உள்ள மலேசிய உயர் ஆணையம் தொடர்பில் உள்ளதாக விஸ்மா புத்ரா மூலம் வெளியுறவு அமைச்சு தெரிவித்திருக்கிறது.
மொசாம்பிக்கில் நிகழ்ந்து வரும் கலவரம் குறித்து உயர் ஆணையம் கண்காணித்து வருவதாக விஸ்மா புத்ரா இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையின் வழி தெரிவித்துள்ளது.
புதன்கிழமை மபுத்தாவில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 33 பேர் கொல்லப்பட்டதுடன் 15 பேர் காயமடைந்ததாக அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட தேர்தலின் முடிவில் அந்நாட்டு மக்கள் கொண்ட அதிருப்தி கலவரமாக மாறியுள்ளது.
தேர்தலில் ஆளும் கட்சியின் வெற்றியைக் கடந்த திங்கட்கிழமை மொசாம்பிக்கின் உயர் நீதிமன்றம் நிலைநிறுத்தியதால் கலவரம் வலுவடைந்ததுள்ளது.
உதவி தேவைப்படும் மொசாம்பிக்கில் இருக்கும் மலேசியர்கள் மின் தூதரக அகப்பக்கம் வழி உயர் ஆணையத்தின் உதவியை நாடாலாம் என்று விஸ்மா புத்ரா தெரிவித்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)