தைப்பிங், 30 டிசம்பர் (பெர்னாமா) - கடந்த வியாழக்கிழமை, மோட்டார் சைக்கிளைத் தீ வைத்தாக தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, பலகார வியாபாரி ஒருவர், இன்று தைப்பிங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
நீதிபதி நபிஷா இப்ராஹிம் முன்னிலையில் அக்குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, 43 வயதுடைய ஜைனத்துல் ரஃபிடா ஜைனுல் ஆபிடின் தமது செயலுக்காக வருந்தி அதனைப் புரிந்ததாக தலையசைத்தார்.
22 வயதுடைய ஜைனதுல் ஷகிரா அமிரா ஜைனி என்பவருக்குச் செந்தமான 7,000 ரிங்கிட் மதிப்புள்ள ஹோண்டா ஆர்எஸ்எக்ஸ் ரக கருப்பு நிற மோட்டார் சைக்கிளைத் தீ வைத்ததாக அப்பெண் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த வாரம் 26ஆம் தேதி, மதியம் மணி 3.50 அளவில் தைப்பிங்கில் உள்ள ஜாலான் மஸ்ஜிட் போக்கோ அசாமில் அக்குற்றத்தைப் புரிந்துள்ள அவர் குற்றவியல் சட்டம், செக்ஷன் 435இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர் புகார் அளித்தவரை தொந்தரவு செய்யக்கூடாது என்ற நிபந்தனைகளுடன், 4,000 ரிங்கிட் ஜாமீன் தொகை மற்றும் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில், ஜைனத்துல் ரஃபிடாவை விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
தண்டனை வழங்குவதற்கு இவ்வழக்கை அடுத்தாண்டு ஜனவரி 14-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)