பொது

இந்தியர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான கூடுதல் முயற்சிகள் தொடரப்படும்

31/12/2024 07:05 PM

கோலாலம்பூர், 31 டிசம்பர் (பெர்னாமா) - இந்திய சமூகத்தின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் கூடுதல் முயற்சிகள் அடுத்த ஆண்டும் அமல்படுத்தப்படும்.

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் வழிகாட்டுதலின்படி தேசிய வளர்ச்சிக்கு ஏற்ப இந்திய சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்ய இம்முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்திய சமூகத்திற்காக அதிகமான முயற்சிகளை செயல்படுத்துவதோடு இதர அரசாங்க நிறுவனங்களின் மூலம் பலனடையக்கூடிய பல திட்டங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் தமது அமைச்சை அறிவுறுத்தியுள்ளதாக, 2025 புத்தாண்டு வாழ்த்து செய்தியில் ரமணன் குறிப்பிட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் மலேசிய இந்தியர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான மடானி அரசாங்கத்தின் நோக்கம் புலப்படுவதாக அவர் விவரித்தார்.

இதுவரை தமது அமைச்சால் செயல்படுத்தப்பட்ட ஏழு திட்டங்கள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்த ஆண்டும் அவை மேம்படுத்தப்படும் என்று ரமணன் கூறினார்.

இவ்வாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வணக்கம் மடானி திட்டத்தின் மூலம், 90 வழிப்பாட்டுத் தளங்களுக்கு 31 லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)