கோத்தா பாரு, 03 ஜனவரி (பெர்னாமா) - போலீசாருக்குக் கையூட்டு வழங்க முயற்சித்த வழக்கு விசாரணைக்கு உதவும் பொருட்டு சட்டவிரோதக் குடியேறிகளை உட்படுத்திய ஆள் கடத்தல் கும்பலின் முகவர் ஒருவர், இன்று தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரையில் மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இன்று கோத்தா பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் செய்த விண்ணப்பத்தைத் தொடர்ந்து 25 வயதான அவ்வாடவருக்கு எதிராக மாஜிஸ்திரேட் முகமட் ஃபௌஸான் முகமட் சுஹைரி, அத்தடுப்பு காவல் உத்தரவைப் பிறப்பித்தார்.
சட்டவிரோத நடவடிக்கையை பாதுகாப்பதற்கு போலீஸ் அதிகாரிக்கு ஐம்பதாயிரம் ரிங்கிட் கையூட்டு வழங்க முயன்றதாக சந்தேகிக்கப்படும் நிலையில், இவ்வழக்கு 2009-ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் சட்டம் செக்ஷன் 17 உட்பிரிவு (பி) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.
முன்னதாக, கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி கோத்தா பாரு, ஜாலான் ஸ்ரீ செமர்லாங் மற்றும் ஜாலான் புசார் லாப்பாங்கான் தெர்பாங் சுல்தான் இஸ்மாயில் பெட்ராவில் கடத்தலில் ஈடுபட்ட தம்மையும் மூன்று சட்டவிரோத குடியேறிகளையும் விடுவிக்க போலீசாருக்குக் கையூட்டு வழங்க முகவர் ஒருவர் முயன்றதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)