ஷா ஆலம், 03 ஜனவரி (பெர்னாமா) - சுபாங், சன்வே சிட்டியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பின்னர் இறந்த நால்வர் உட்கொண்ட எக்ஸ்தாசி வகை போதைப் பொருள், அந்நிகழ்ச்சி வளாகத்தில் பெறப்பட்டிருக்கலாம் அல்லது வாங்கப்பட்டிருக்கலாம் என்று போலீஸ் நம்புகிறது.
அந்த போதைப் பொருள் எவ்வாறு வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டது என்பதைக் கண்டறிய தமது தரப்பு தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், தற்போது, அவ்வளாகத்தின் அனைத்து நுழைவாசல்களிலும் K9 மோப்ப நாய் பிரிவும் பணியமர்த்தப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர், டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய டத்தோ ஹுசேன், அந்த இசை நிகழ்ச்சியின்போது சம்பந்தப்பட்ட அந்நபர்கள், எக்ஸ்தாசி வகை போதைப் பொருளைத் தவிர்த்து மதுபானங்களையும் உட்கொண்டது விசாரணையில் தெரிய வந்ததாக கூறினார்.
இசை நிகழ்ச்சி வளாகத்திற்கு வெளியே அமைதியைக் காக்கவும் கண்காணிக்கவும் மட்டுமே போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)