பத்துமலை, 01 ஜனவரி (பெர்னாமா) -- 2025-ஆம் ஆண்டு, இன்று புதன்கிழமை இனிதே தொடங்கியிருக்கிறது.
புதிய கனவுகள், புதிய திட்டங்கள், புதிய முயற்சிகள், புதிய தொடக்கம் என இவ்வாண்டு வெற்றிகரமான ஆண்டாக அமைய வேண்டும் என்பது அனைவரின் ஆவலாகும்.
அந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் நினைவேற, காலையில் கோவிலுக்குச் சென்று இறை வழிபாடு செய்து மக்கள் இந்நாளை தொடங்கும் நிலையில், சிலாங்கூர், பத்துமலை ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயமும் மக்களின் வருகையால் களைகட்டியது.
புத்தாண்டுகளில், பத்துமலை திருத்தலத்தில் வீற்றிருக்கும் 140 அடி உயரம் கொண்ட முருகப் பெருமானின் திருவடிகளுக்குப் பன்னீர் அபிஷேகம் செய்வது வழக்கமான ஒன்றாகும்.
அதில், இன்று ஒன்பதாவது ஆண்டாக பக்தர்கள் புடைசூழ வெகு விமரிசையாக பன்னீர் அபிஷேக விழா நடந்தேறியது.
பத்துமலைத் திருத்தலம், பக்திக்கும் பரவசத்திற்கும் உகந்த இடம் என்பதால் புதிய ஆண்டை இந்த ஆலயத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்ற உற்சாகத்தில் அதிகமான மக்கள் அங்கு கூடி இருந்தனர்.
நேற்றோடு விடைபெற்ற 2024-ஆம் ஆண்டு, சிறப்பானதாக அமைந்திருந்தாலும் புதிதாய் மலர்ந்த இந்நாளில், புத்தாண்டுக்கான புதிய தீர்மானங்களைத் தாங்கள் எடுத்திருப்பதாக வழிப்பாட்டில் கலந்து கொண்ட சிலர் கூறினர்.
''புத்தாண்டை முன்னிட்டு இங்கே வருவது இதுவே முதல்முறை. மிகவும் சிறப்பாக இருக்கின்றது. இந்த 2025-ஆம் ஆண்டு அனைவருக்கும் சிறப்பான ஒரு ஆண்டாக அமைய முருகனை வேண்டிக் கொள்கிறேன்'', என்றார் மலாக்காவைச் சேர்ந்த விஷ்ணுதரன் செல்வராஜ்.
''இங்கு வந்து பார்த்தால் பக்தர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். ஆக, இவ்வாண்டில் அனைவருக்கும் மகிழ்ச்சியாகவும் நிறைய சாதனைகளைப் படைக்கவும் நிச்சயம் முருகன் துணையாக இருப்பார். கடந்தாண்டுகளை விட இவ்வாண்டு நாங்கள் சாதனைப் படைக்க நினைப்பதை கண்டிப்பாக சாதனை படைப்போம். அதற்கு முருகப்பொருமானின் ஆசிர்வாதம் எங்களுக்கு எப்பொழுதும் கிடைக்க வேண்டும்'', என்று சரஸ்வதி கிருஷ்ணன் கூறினார்.
மேலும், வெளிநாட்டு சுற்றுப்பயணிகளின் வருகையும் பத்துமலையில் இன்று அதிகமாக இருந்தது.
இனம், மதம், சமயங்களைக் கடந்து ஒற்றுமையாக வாழும் மலேசிய நாட்டின் கலச்சாரம் மற்றும் பண்பாடுகள் உட்பட புத்தாண்டிற்கான தங்களின் தீர்மானங்கள் பற்றியும் சிலர் பகிர்ந்து கொண்டனர்.
''ஆக, நாங்கள் பத்துமலைக்கு வந்திருக்கிறோம். இவ்வருடத்திற்கான தீர்மானம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது, அன்பாக இருப்பது, புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடுவது. இதுவரை அனுபவம் மிகவும் நன்றாக இருக்கின்றது. மக்கள் அனைவரும் அன்பாக இருக்கின்றனர், உதவும் மனப்பான்மை கொண்டவர்கள். எனவே, நாங்கள் இங்கே இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறோம்'', என்று கூறினார் நியூசிலாந்தைச் சேர்ந்த ரீஸ்.
''ஆக, இந்த புத்தாண்டை நாங்கள் இங்கே கொண்டாடுவது மற்றும் புத்தாண்டை முன்னிட்டு நிறைய பட்டாசுகள் வெடிக்கப்பட்டது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. அடுத்தாண்டில் நாங்கள் நிறைய சுற்றுப் பயணம் செய்யவிருக்கிறோம். புதிய கலாச்சாரங்கள், இயற்கையின் அழகு மற்றும் நாட்டு மக்கள் போன்ற மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்கவுள்ளோம்'', என்றார் ஜெர்மனியைச் சேர்ந்த கார்லா.
இதனிடையே, புத்தாண்டை முன்னிட்டு பத்துமலை வளாகத்தைச் சுற்றி பூக்கடை வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளின் புதிய இலக்குகள் குறித்தும் பெர்னாமா செய்திகள் கேட்டறிந்தது.
''கடந்தாண்டு மிதமாக தான் இருந்தது. அதற்கு முன்னதாக கொவிட்-19 காலக்கட்டத்தில் கட்டுப்பாடுகள் இருந்தமையால் கொஞ்சம் மோசமாக இருந்தது. ஆனால், இவ்வருடம் இன்று மட்டுமே வியாபாரம் மிகவும் சிறப்பாக இருக்கின்றது. ஆக, இந்த வருடம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது'', என்று கூறினார் பூக்கடை வியாபாரி பார்வதி இராமையா.
சிலாங்கூரின் மையப் பகுதியில் இவ்வாலயம் இருப்பதால் அதிகமான மக்கள் கூட்டத்தினால், பத்துமலை பகுதியைச் சுற்றிலும் போக்குவரத்து நெரிசல் காலை முதல் சில மணிநேரங்கள் நீடித்தன.
புத்தாண்டில் முருகப் பெருமானை மக்கள் தடைகளின்றி வழிப்பட்டு செல்வதற்கு வானிலையும் இணைந்து ஒத்துழைத்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)