பொது

இவ்வாண்டு இலக்கவியல் அமைச்சின் முதன்மை திட்டமாக ஏ.ஐ விழிப்புணர்வு நிகழ்ச்சி விளங்கும்; அமைச்சர் நம்பிக்கை

04/01/2025 07:56 PM

சைபர்ஜெயா, 04 ஜனவரி (பெர்னாமா) -- தீவிர வளர்ச்சி கண்டு வரும், இலக்கவியல் தொழில்நுட்பப் பயன்பாட்டின் வழி, மக்கள் பயனடைவதை உறுதிசெய்ய இவ்வாண்டு இலக்கவியல் அமைச்சின் முதன்மை திட்டமாக செயற்கை நுண்ணறிவு, ஏ.ஐ விழிப்புணர்வு நிகழ்ச்சி விளங்கும்.

தேசிய செயற்கை நுண்ணறிவு அலுவலகம், என்.ஏ.ஐ.ஓ வழி மேற்கொள்ளப்படும் இந்த விழிப்புணர்வுத் திட்டத்தில், இணையப் பாதுகாப்பு குறித்தும் வலியுறுத்தப்படவிருப்பதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

''ஆமாம். அதுதான் எங்களின் நோக்கம். நாங்கள் தேசிய ஏ.ஐ அலுவலகத்தை உருவாக்கியுள்ளோம். இதற்கு காரணம், தொழில்நுட்ப விழிப்புணர்வை உறுதிசெய்வது மிகவும் அவசியம் என்று நாங்கள் கருதுகிறோம். அதோடு, நாங்கள் அனைத்து தரப்பு மக்கள், தொழில்துறை, கல்வித்துறை மற்றும் மக்கள் ஆகியோரைப் பார்க்க வேண்டும். எனவே, இவ்வாண்டில் (விழிப்புணர்வு) நிகழ்ச்சிகளை மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய நாங்கள் கடந்த மாதம் தொடக்கி வைத்தோம்,'' என்றார் அவர்.

இன்று, சைபர்ஜெயாவில், 2024/2025 தமிழ் பள்ளிகளின் தேசிய அளவிலான தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப போட்டியின் இறுதி விழாவை தொடக்கி வைத்தப் பின்னர் கோபிந்த் சிங் அவ்வாறு குறிப்பிட்டார்.

பள்ளிகளில், ஏ.ஐ தொழில்நுட்பம் தொடர்பான கல்வி செயல்முறை சுமூகமாக நடைபெறுவதற்கு, கல்விக் கழகங்களில் முழுமையான வசதிகள் இருப்பதை உறுதிசெய்வது உட்பட பள்ளி மாணவர்கள் மத்தியில் அதன் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள, கல்வி அமைச்சு மற்றும் உயர்க்கல்வி அமைச்சுடன் தமது தரப்பு ஒத்துழைப்பை மேற்கொள்ளவிருப்பதாக அவர் விளக்கினார்.

இதனிடையே, தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகள் மாணவர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்துவதோடு அவர்கள் அடுத்தக் கட்டத்திற்கு செல்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் என்று 2024-ஆம் ஆண்டு தேசிய அளவிலான தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப போட்டியின் தலைவர் குணசேகரன் கந்தசாமி தெரிவித்தார்.

''இந்தப் போட்டி முதல் கட்டமாக மாநில ரீதியில் இணையம் வழியாக நடத்தப்பட்டது. அதில் ஏறக்குறைய 2,100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அதில் வெற்றிபெற்ற 240 மாணவர்கள் இன்று நடைபெறும் இறுதிசுற்றில் கலந்து கொண்டனர். ஐந்து விதமான போட்டிகள் இருந்தன,'' என்று அவர் கூறினார்.

அதேவேளையில், இப்போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களும் ஆசிரியர்களும் சிலர் பெர்னாமாவிடம் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டனர்.

''இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது, தொடர்ந்து தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்களில் என்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது,'' என்று என்றேட்டா தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவர், ஹரிப்பிரியா தியாகு தெரிவித்தார்.

''இந்த மாதிரியான போட்டிகளை நடத்த மற்றப் பள்ளிகளும் ஊக்குவிக்க வேண்டும். தங்கள் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் இதுபோன்ற போட்டிகளில் பங்குபெற்று தங்கள் ஆற்றலை மேம்படுத்திக் கொள்ள இப்போட்டி ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறது,'' என்று கோ.சாரங்கபாணி தமிழ்ப்பள்ளி ஆசிரியர், புருஷோத்தமன் முனுசாமி குறிப்பிட்டார்.

இதுபோன்ற போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொள்ளும்போது பள்ளி தரப்பினர் வழங்கும் ஊக்குவிப்பு அவர்களது வெற்றிக்கு தூண்டுதலாக இருக்கும் என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)