பொது

சிலாங்கூரில் கலை நிகழ்ச்சிகளுக்கான வழிகாட்டுதல்கள் மறுஆய்வு

04/01/2025 06:45 PM


ஜெராம், 04 ஜனவரி (பெர்னாமா) - போதைப் பொருள் தொடர்பான உயிரிழப்பு சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க சிலாங்கூரில் கலை நிகழ்ச்சிகளுக்கான வழிகாட்டுதல்களை அம்மாநில அரசாங்கம் மறுஆய்வு செய்யும்.

இச்சம்பவத்தை தங்கள் தரப்பு கடுமையாகக் கருதுவதாகவும், இதன் தொடர்பில் சிலாங்கூர் மாநில ஊராட்சி மற்றும் சுற்றுலா துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ங் சுய் லிம் உடன் பேச்சு நடத்தப்படும் என்றும் அம்மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில் முனைவோருக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முஹமட் நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.

''அண்மையில் உயிரிழப்பை உட்படுத்திய சம்பவம் குறித்து நாங்கள் மிகவும் வருந்துகிறோம். எனினும், அமலாக்கத் தரப்பினர் விசாரணை மேற்கொண்டு திட்டமிடப்பட்ட கலை நிகழ்ச்சியை ஒத்திவைக்க சரியான நடவடிக்கை எடுத்திருப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். கலை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், அதன் அமலாக்க செயல்முறையை மறு பரிசீலனை செய்வார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம், '' என்றார் அவர்.

இன்று, சிலாங்கூர் ஜெராம், பந்தாய் ரெமிசில் 2024 சிலாங்கூர் மடானி இளைஞர் கண்காட்சியைத் தொடக்கி வைத்தப் பின்னர் முகமட் நஜ்வான் அவ்வாறு குறிப்பிட்டார்.

பிங்க்ஃபிஷ் கலை நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த நால்வர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணை நிறைவடையும் வரையில், சிலாங்கூரில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான பெர்மிட் அனுமதியை போலீசார் தற்காலிகமாக ரத்து செய்வதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹூசைன் உமார் கான் நேற்று அறிவித்திருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)