கோலாலம்பூர், 01 ஜனவரி (பெர்னாமா) - 2025ஆம் ஆண்டை வரவேற்கும் நோக்கில் கண்ணைக் கவரும் வாணவேடிக்கைகள் கோலாலம்பூர் கோபுரத்தையும் அதனைச் சுற்றிய பகுதியையும் கோலாகலமாக்கியது.
அது, இவ்வாண்டில் மலேசியாவின் மிக உயரமான வாணவேடிக்கை காட்சியாக மலேசிய சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்தது.
30 ஆண்டுகளுக்கும் முன்னர் நிறுவப்பட்டு உலகின் உயரமான தொலைத்தொடர்பு கோபுரம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக உயர்ந்த கோபுரத்தில் இந்த வண்ணமயமான நிகழ்ச்சி முதன்முறை நடத்தப்பட்டது.
இதன் வழி அது மீண்டும் தனக்கென ஒரு வரலாற்றை உருவாக்கியுள்ளதாக கோலாலம்பூர் கோபுரத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நஸ்லி சாட் கூறினார்.
"நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், ஏனென்றால் மலேசியாவில் தரை மட்டத்திலிருந்து 307.61 மற்றும் கடல் மட்டத்திலிருந்து 401.61 உயரத்திற்கு மேல் சென்று வானவேடிக்கைகள் வெடிக்கப்பட்டன என்று நினைக்கிறேன். இந்த உயரத்தில் வானவேடிக்கைகளை எந்த நிறுவனமும் வெடித்தது இல்லை என நினைக்கிறேன், " என்றார் அவர்.
கோலாலம்பூரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழும் அந்த கோபுரத்தின் கீழ் மட்டத்திலும் உச்சியிலும் நடத்தப்பட்ட வாணவேடிக்கைகளைக் காண உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் சுமார் 3,000 பார்வையாளர்கள் திரண்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)