தென் கொரியா, 01 ஜனவரி (பெர்னாமா) - தென் கொரியாவில் இராணுவ சட்ட அறிவிப்பினால் அதிபர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட யூன் சுக் யோலைக் கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நாட்டின் அதிபர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
அவரது பதவி நீக்கம் தொடர்பான விசாரணையும் அரசியல் குற்றச்சாட்டும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
விசாரணைக்கு வரும்படி மூன்று முறை அழைப்பு விடுத்தும் யூன் சுக் யோல் வராத நிலையில் கைதாணை பிறப்பிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த மனுவை விசாரித்த தென் கொரிய நீதிமன்றம், யூன் சுக் யோலை கைது செய்ய அனுமதி அளித்திருக்கின்றது.
தற்போதைய கைதாணை ஜனவரி 6 வரை உள்ளதால், கைதான பின்னர் அவர்
தடுப்பு காவலில் வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதைத் தடுக்க முயலும் எவரும் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்வர் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.
இதனிடையே, அவருக்கு ஆதரவாக கொடிகள் மற்றும் பதாதைகளை ஏந்தி ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
யூன் சுக் யோலுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள கைது ஆணை செல்லாது என்றும் அவர்கள் எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)