ஜோகூர் பாரு, 01 ஜனவரி (பெர்னாமா) - டிசம்பர் 28-ஆம் தேதி ஜோகூர், இஸ்கண்டார் புத்தரியில் கார் ஒன்றில் மேற்கொண்ட சோதனையில் 24 லட்சத்து 10 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பல வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் உள்நாட்டைச் சேர்ந்த காதல் ஜோடியை போலீஸ் கைது செய்துள்ளது.
பின்னிரவு மணி 12.30 தொடங்கி அதிகாலை மணி 4.30 வரை, இஸ்கண்டார் புத்தரி மாவட்ட போதைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு மேற்கொண்ட அந்த சிறப்பு சோதனையில் 33 வயது ஆணும் 31 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ எம்.குமார் தெரிவித்தார்.
போதைப்பொருளை விநியோகிக்க பயன்படுத்தப்பட்ட தொயோத்தா வியோஸ் ரக காரில் அமர்ந்திருந்த போது, அவர்கள் கைது செய்யப்பட்டதாக டத்தோ எம்.குமார் கூறினார்.
''போலீசார் பின்வருமாறு போதைப்பொருளைப் பறிமுதல் செய்துள்ளனர். எக்டசி என நம்பப்படும் 14,401.81 கிராம் தூள், 25.58 கிராம் கெட்டமின், 2.79 கிராம் ஷாபு, 19.48 கிராம் எக்டசி மாத்திரைகள், '' என்றார் அவர்.
புதன்கிழமை, ஜோகூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் குமார் அந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
மேலும், இச்சோதனையின் போது 15 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள நகைகளும் தாய்லாந்து ரொக்கப்பணம் 2,170 பாட்டும் (Bath) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த அக்டோபர் மாதம் முதல் போதைப்பொருள் விநியோகப்பட்டு வந்ததாகவும் ஒரு பொட்டலம் 200 ரிங்கிட் முதல் 300 ரிங்கிட் வரை விற்கப்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் போதைப்பொருள் உட்கொண்டிருப்பதும் போதைப்பொருள் தொடர்பாக முந்தைய குற்றப் பதிவுகளைக் கொண்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வழக்கு 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டம் செக்ஷன் 39பி-யின் கீழ் விசாரிக்கப்படுகிற நிலையில் டிசம்பர் 28ஆம் தேதி தொடங்கி ஏழு நாட்களுக்குக் கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)