உலகம்

பொருளாதார வளர்ச்சியில் சிங்கப்பூர் முன்னேற்றம்

01/01/2025 07:12 PM

சிங்கப்பூர், 01 ஜனவரி (பெர்னாமா) - சிங்கப்பூரின் பொருளாதாரம் 2024ஆம் ஆண்டில் எதிர்பார்த்ததை விட 4.0 விழுக்காடு வளர்ச்சி கண்டிருக்கின்றது.

வலுவான பொருளாதாரத்துடன் நாட்டின் உண்மையான வருமானம் தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமரும் நிதி அமைச்சரும் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.

பல வளர்ச்சியடைந்த நாடுகளைப்போல் வேலையில்லாத் திண்டாட்டத்தைச் சிங்கப்பூர் எதிர்கொள்ளவில்லை என்றும், கடந்த பத்தாண்டுகளில் சராசரி வருமானம் ஆண்டுக்கு 2.2 விழுக்காடு அதிகரித்து, பணவீக்க விகிதத்தை கடந்திருப்பதாக, லாரன்ஸ் வோங் தமது புத்தாண்டு செய்தியின்வழி கூறியுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம், 2024ஆம் ஆண்டிற்கான சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சுமார் 3.5 விழுக்காடு இருக்கும் என்று அந்நாட்டின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு MTI கணித்துள்ளது.

பிப்ரவரி 18ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் 2025-ஆம் ஆண்டிற்கான வரவுசெலவு திட்டமானது, சிங்கப்பூரின்அடுத்தக்கட்ட முன்னேற்றத்தைக் கோடிட்டுக் காட்டுவதாக வோங் கூறினார்.

மேலும், தமது நாட்டின் பொருளாதாரப் போட்டித்தன்மையை அதிகரித்து, சிங்கப்பூர் மக்களுக்கு வாய்ப்புகள் மற்றும் தரமான வேலைகளை உருவாக்கவதோடு வாழ்க்கைச் செலவின சுமையைத் தொடர்ந்து குறைக்கவும் அரசாங்கம் விரும்புவதாக அவர் புத்தாண்டு செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)