கோலாலம்பூர், 01 ஜனவரி (பெர்னாமா) - 2024ஆம் ஆண்டில் சிறப்பான அடைவுநிலை பதிவு செய்திருக்கும் நிலையில் 2025ஆம் ஆண்டிலும் தமது சிறப்பான ஆட்டத்தை தொடரவுள்ளதாக தேசிய மகளிர் போலிங் விளையாட்டாளர், சின் லி ஜேன் தெரிவித்திருக்கிறார்.
தற்போது, ஜனவரி 5ஆம் தேதி தொடங்கி ஜனவரி 14ஆம் தேதி வரை ஹாங் காங்கில் நடைபெறவுள்ள உலக போலிங் போட்டிக்கான தயார் நிலைகளில் கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறுகிறார்.
''நான் அதை ஒரு அழுத்தமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் எனக்கு நானே அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக நான் எனது விளையாட்டை அதிகமாக அனுபவிக்க விரும்புகிறேன். காரணம் போலிங் விளையாட்டில் எதுவும் நடக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியும், '' என்றார் அவர்.
மகளிர் ஒற்றையர் பிரிவுக்கு கவனம் செலுத்தினாலும், கடந்த போட்டிகளில் மகளிர் குழு பிரிவில் பெற்ற வெற்றிகளை தொடரவும் 32 வயதான அவர் இலக்கு கொண்டுள்ளார்.
குழு பிரிவில் நத்தாஷா முகமட் ரோஸ்லான், சிதி சஃபியா அமிரா அப்துல் ரஹ்மான் மற்றும் கில்லியன் லிம் ஆகியோருடன் லி ஜேன் கைக்கோர்க்கவுள்ளார்.
ஆசியான் வெற்றியாளர் பட்டத்தை வென்றது உட்பட கடந்த ஆண்டு பல வெற்றிகளைப் பெற்றிருக்கும் லி ஜேன் சிறந்த அடைவுநிலையில் உள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)