பொது

97 விழுக்காடு மாணவர்களின் வருகையுடன் தொடங்கிய எஸ்பிஎம் தேர்வு

02/01/2025 03:35 PM

புத்ராஜெயா, 02 ஜனவரி (பெர்னாமா) --   2024-ஆம் ஆண்டிற்கான எஸ்பிஎம் தேர்வு, முதல் நாளான இன்று, 97 விழுக்காடு மாணவர்களின் வருகையுடன் சுமூகமாக நடைபெற்றது.

இருப்பினும், இன்னும் தேர்வு மையத்திற்கு வராத எஞ்சிய 3 விழுக்காடு அல்லது 10 ஆயிரம் மாணவர்களை கல்வி அமைச்சு அடையாளம் கண்டு வருவதாக, அதன் அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார்.

''இதுவரையில் தேர்வு எழுத வருகைப் புரிந்த மாணவர்களின் எண்ணிக்கை 97 விழுக்காடை எட்டியுள்ளது. இது சிறந்த வருகையைக் குறிக்கின்றது.அவர்களின் வருகை கண்டறிந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் பத்தாயிரம் பேர் உள்ளனர். நமது பிள்ளைகள் எஸ்பிஎம் தேர்வு எழுதுவதை உறுதி செய்ய அவர்களின் வருகை அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்'', என்று அவர் கூறினார்.

இன்று, புத்ராஜெயாவில் 2024-ஆம் ஆண்டிற்கான எஸ்பிஎம் தேர்வு செயல்பாடு தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் ஃபட்லினா சிடேக் அதனை கூறினார்.

நாடு முழுவதிலும் உள்ள மூவாயிரத்து 337 தேர்வு மையங்களில், 4 லட்சத்து ஈராயிரத்து 956 மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வு எழுதுகின்றனர்.

மேலும், தேர்வு காலம் முழுவதும் உதவுவதற்கு 44 ஆயிரத்து 968 தேர்வு அதிகாரிகள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதோடு, 5 ஆயிரத்து 780 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)