புத்ராஜெயா, 02 ஜனவரி (பெர்னாமா) -- பள்ளிகளில் நடக்கும் பகடிவதை சம்பவங்களை மறைக்க வேண்டாம் என்று பள்ளி நிர்வாகத்தினருக்கு நினைவூட்டப்பட்டுள்ளது.
பள்ளிகளில் பகடிவதை சம்பவங்கள் தொடர்ந்து பரவாமல் கட்டுப்படுத்த, அதன் தொடர்பான எந்தவொரு சம்பவமும் புகாரளிக்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறியுள்ளார்.
''வழிகாட்டுதல்களின் அடிப்படையில் பள்ளிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேவேளையில், எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கைகள் குறித்து மேலும் விளக்கம் பெற அதை கல்வி அமைச்சிடம் தெரிவிக்க வேண்டும். அத்தகையச் சம்பவங்களை இரகசியமாக வைத்திருக்க வேண்டாம் என்று பள்ளிகளுக்குக் குறிப்பாக தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்'', என்று அவர் கூறினார்.
மாணவர் தங்கும் விடுதியைக் கொண்டிருக்கும் பள்ளியில் நடந்த பகடிவதை சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அவர், கல்வி அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இல்லாத பள்ளியில் அச்சம்பவம் நடந்ததாக தெளிவுப்படுத்தினார்.
இருப்பினும், பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பெற்றோர்கள் கல்வி அமைச்சின் Adu Buli KPM எனும் பகடிவதை அகப்பக்கத்தில் நேரடியாக புகார் அளிக்குமாறு ஃபட்லினா பரிந்துரைத்தார்.
அதோடு, பள்ளியில் நடக்கும் பகடிவதை குறித்த புகார்களை adubuli@moe.gov.my என்ற மின்னஞ்சல் முகவரி, www.moe.gov.my/aduanbuli எனும் அகப்பக்கம் அல்லது 03-8884 9325 என்ற எண் வழியாகவும் தெரிவிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, GISB குழும நிறுவனம் தொடர்புடைய சிறார்களின் கல்வி மற்றும் சமூக நலத் துறையின் கீழ் அவர்கள் தொடர்ந்து பாதுகாப்பான வீடுகளில் தங்க வைப்பதற்கான தேவை குறித்த ஒருங்கிணைப்பு பணிகளைக் கல்வி அமைச்சு மேற்கொண்டு வருவதாக அதன் அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
''கல்வி அமைச்சு அளவில் ஜேகேஎம் கீழ் பாதுகாப்பான வீடுகளில் தொடர்ந்து தங்கியிருக்கும் சிறார்கள் இருப்பதால், நாங்கள் மீண்டும் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்கிறோம். கேபிஎம்-இன் கீழ் கல்வியை த் தொடர வயதின் அடிப்படையில் அவர்களின் கல்வியை மீண்டும் சீரமைக்கின்றோம்'', என்று அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)