பத்து பகாட், 02 ஜனவரி (பெர்னாமா) -- வெள்ளம் ஏற்படும் சாத்தியம் உள்ள ஆறு மாநிலங்களில், எஸ்பிஎம் தேர்வு எழுதுவதற்கான 133 மாற்று தேர்வு மையங்களைக் கல்வி அமைச்சு அடையாளம் கண்டுள்ளது.
அடிக்கடி வெள்ளம் ஏற்படும் கிளந்தான், திரெங்கானு, கெடா, பகாங், ஜோகூர், சபா ஆகிய ஆறு மாநிலங்களில் தேர்வு நடைபெறுவதை உறுதிசெய்ய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, கல்வி தலைமை இயக்குனர் அஸ்மான் அட்னான் கூறினார்.
பாதிக்கப்பட்ட தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உதவும் வகையில் Op Payung நடவடிக்கையை, மாநில கல்வி இலாகா செயல்படுத்தும் என்று அஸ்மான் தெரிவித்தார்.
''கல்வி அமைச்சில் நாங்கள் வெள்ளத்தை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். சில பள்ளிகளில் உள்ள தேர்வு மையங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இதுவே, பள்ளி தேர்வு மையமாக செயல்பட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால், எஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர்களை நாங்கள் தயார் செய்துள்ள மாற்று தேர்வு மையத்திற்கு மாற்றிவிடுவோம்'', என்று அவர் கூறினார்.
இன்று, ஜோகூர், திங்கி பத்து பகாட் தேசிய இடைநிலைப்பள்ளியில் முதல் நாள் எஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர்களைப் பார்வையிட்ட பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அதனை கூறினார்.
இவ்வாண்டு தொடங்கி ஜோகூர் மாநிலத்தில், வார இறுதி விடுமுறைகள் மறுசீரமைக்கப்படவிருக்கின்ற போதிலும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் அடுத்த திங்கட்கிழமை அம்மாநிலத்தில் எஸ்பிஎம் தேர்வு நடைபெறும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)