பொது

டிசம்பர் 31-இல் 15 லட்சம் பயணிகள்; புதிய அத்தியாயத்தில் ரேபிட் கேஎல்

02/01/2025 04:59 PM

கோலாலம்பூர், 02 ஜனவரி (பெர்னாமா) --   RAPID KL நிறுவனம் தொடங்கப்பட்டது முதல், கடந்த டிசம்பர் 31ஆம் தேதி, அதிக எண்ணிக்கையிலான அதாவது 15 லட்சம் பயணிகள் அச்சேவையைப் பயன்படுத்தியுள்ளனர்.

அதில் குறிப்பாக, கேஎல்சிசி, துன் ரசாக் EXCHANGE (TRX), லலாபோர்ட், புக்கிட் பிந்தாங், பசார் செனி, சன்வெய் உள்ளிட்ட புத்தாண்டுக் கொண்டாட்ட இடங்களுக்கு வருகை தந்த பார்வையாளர்களின் வருகை 2024 ஆம் ஆண்டின் தினசரி சராசரி பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 30 விழுக்காடு அதிகரித்துள்ளதாக PRASARANA குழுமத் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான முஹமட் அசாருடின் மட் சா இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

புத்தாண்டு கொண்டாட்ட இரவின் போது இரயில் சேவையைப் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 70 ஆயிரம் என்றும், அதில் காஜாங் வழிதடத்திலேயே அதிகமானோர் அதாவது மூன்று லட்சத்து 68,018 பயணிகள் பயணித்ததாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதேவேளையில், பேருந்து சேவையை இரண்டு லட்சத்து 7,266 பேர் பயன்படுத்தி இருந்தனர்.

பெரிய அளவிலான செயல்பாட்டைக் கையாண்ட வெற்றி குறித்து கருத்துரைத்த முஹமட் அசாருடின், மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்குவதில் ரேபிட் கேஎல் ஊழியர்கள் உயர்திறன், ஆற்றல் மற்றும் நல்ல அனுபவத்தைக் கொண்டுள்ளதை இது நிரூபிப்பதாகக் கூறினார்.

அன்றைய தினத்தில் செயல்பாட்டு நேரம் நிறைவடையும் வரை, அதாவது ஜனவரி முதலாம் தேதி பின்னிரவு மணி மூன்று வரை மூவாயிரம் ரேபிட் கேஎல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)