குவாந்தான், 13 ஜனவரி (பெர்னாமா) -- பகாங் மாநிலத்தின் தேசிய இலக்கவியல் இணைப்புத் திட்டம், JENDELA-வின் முதல் கட்டத்தின் கீழ் நிறைவுபடுத்தப்பட்ட 191 தொலைத்தொடர்பு கோபுரங்களில் மொத்தம் 144 முழுமையாக செயல்படத் தொடங்கி இருக்கின்றன.
இதர 47 தொலைத்தொடர்பு கோபுரங்கள் ஏப்ரல் மாதத்திற்குள் முழுமையாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தொடர்பு மற்றும் பல்லூடகக் குழு, இளைஞர், விளையாட்டு மற்றும் பகாங் அரசு சாரா அமைப்புகளின் தலைவரான ஃபட்சிலி முஹமட் கமால் தெரிவித்தார்.
"இவ்வாண்டின் முதல் காலாண்டிற்குள் அனைத்து கோபுரங்களும் தகவல் தொடர்பு முறைக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் நான் தெரிவித்துள்ளேன். அதாவது ஏப்ரல் முதலாம் தேதிக்குள் அனைத்து கோபுரங்களும் முழுமையாக செயல்படும்," என்று அவர் கூறினார்.
இன்று சுங்கை பாண்டனில் EDOTCO குழுமத்தினால் JENDELA முதல் கட்டத் திட்டத்திற்கான 45 புதிய தொலைத்தொடர்பு கோபுரங்களை நிர்மானிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு தெரிவித்தார்.
இதனிடையே, பகாங்கில் உள்ள அனைத்து மாவட்டங்களும் 5G நிலையங்களின் சீரான கட்டமைப்பைக் கொண்டிருப்பதால், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதோடு, சிறந்த இணைய அணுகலை சமூகத்தினர் பெறுவதை உறுதிசெய்யும் என்றும் ஃபட்சிலி நம்பிக்கை தெரிவித்தார்.
"உற்பத்தித் துறையில் 5G வணிகம் மற்றும் வேலைகளை விரைவுபடுத்த உதவுகிறது என்றால், குறிப்பாக ரவூப், கேமரன் மலை, லிப்பிஸ், ஜெராண்டுட், மாரான், பெரா ஆகிய இடங்களில் 5G சேவைக்கான கட்டமைப்புகளை உருவாக்குவது குறித்து தேசிய மின்சார வாரியம் டிஎன்பி-க்கு தமது விருப்பத்தை தெரிவித்துள்ளாகவும் அவர் குறிப்பிட்டார்.
மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் இந்த ஆறு மாவட்டங்களில் இணைய சேவை குறைவாகவே உள்ளது.
தொலைத்தொடர்பு வசதியில் எந்த மாவட்டமும் பின்தங்கி இருப்பதை நாங்கள் விரும்பவில்லை என்று கூறிய அவர், அச்சேவை அனைவருக்கும் தேவையானது என்றும் அவர் தெரிவித்தார்.
ஜென்டெலாவின் இரண்டாம் கட்டம், இவ்வாண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தொடர்பு துணை அமைச்சர் தியோ நீ சிங் முன்னதாக, தெரிவித்திருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)