பொது

மக்களுக்கு இணைய வசதிகளை வழங்கும் சரவாக் மாநில முயற்சிகளை,  NADI நிறைவு செய்யும்

13/01/2025 08:35 PM

சிபு, 13 ஜனவரி (பெர்னாமா) -- மக்களுக்கு குறிப்பாக புறநகர் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இணைய வசதிகளை வழங்குவதற்கான சரவாக் மாநில அரசாங்கத்தின் முயற்சிகளை தேசிய தகவல் பரப்பு மையமான NADI நிறைவு செய்வதாக மாநில பயன்பாடுகள் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஜுலாய்ஹி நராவி தெரிவித்துள்ளார்.

மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் உருவாக்கிய இந்த முயற்சி, இலக்கவியல், பொது அறிவு மற்றும் சமூகப் பொருளாதாரப் இடைவெளியை குறைக்கும் திட்டங்களில் மூலம் சமூகத்தை மேம்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

NADI வழங்கும் திட்டங்களில் வர்த்தகம், வாழ்நாள் கற்றல், சொந்த நலன், விழிப்புணர்வு மற்றும் அரசாங்க முயற்சிகள் ஆகிய முக்கிய ஐந்து அம்சங்களில் கவனம் செலுத்தப்படும் என்கிறார் ஜுலாய்ஹி.

அதோடு, மக்களுக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பு பயிற்சிகளை வழங்குவதற்கு NADI வசதிகள் செய்திருக்கின்றது.

இதில் பள்ளி மாணவர்கள் குறிப்பாக பி40 பிரிவை சேர்ந்தவர்கள் மீது முக்கிய இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சரவாக் மாநிலத்தில் 133 NADI மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 23 புதிய மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும்  ஜுலாய்ஹி குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி முழுமையாக செயல்பட்ட NADI Teku 858 பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

பத்து உள்ளூர் தொழில்முனைவோர் தங்களது தயாரிப்புகள் மற்றும் சேவையை இணையத்தில் வெளிப்படுத்தவும் வழிகாட்டியுள்ளது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]