பொது

நஜிப்பிற்கான ஆதரவு பேரணியில் நம்பிக்கை கூட்டணி கலந்து கொள்ளாது - பிரதமர்

03/01/2025 05:58 PM

கம்போங் பண்டான், 03 ஜனவரி (பெர்னாமா) - வரும் திங்கட்கிழமை புத்ராஜெயா நீதிமன்றத்தின் முன்புறம் நடைபெறவிருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கான ஆதரவு பேரணியில் நம்பிக்கை கூட்டணி கலந்து கொள்ளாது.

அதனைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று உறுதிப்படுத்தினார்.

''திங்கட்கிழமை, தேசிய முன்னணி தலைவரைக் கேட்க வேண்டும். நம்பிக்கை கூட்டணி டத்தோ ஶ்ரீ? நம்பிக்கை கூட்டணி அதில் கலந்துகொள்ளாது, '' என்றார் அவர்.

கோலாலம்பூர், கம்போங் பாண்டனில் உள்ள லெஸ்தாரி நயாக மடானி என்ற வீராவத்தி பகுதியில் வர்த்தகர்களையும் பொது மக்களையும் சந்தித்த பின்னர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அவ்வாறு கூறினார்.

அம்னோவின் முன்னாள் தலைவரான டத்தோ ஸ்ரீ நஜிப்பிற்கு அதன் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்தப் பேரணி நடத்தப்படவுள்ளது.

அதோடு அந்தப் பேரணியில் கலந்து கொள்ள தமது கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்ளும் பாஸ் கட்சியின் கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படுகிறது.

அரச மன்னிப்பு ஆணை தொடர்பாக நஜிப் செய்த மேல்முறையீட்டு மனுவை வரும் ஜனவரி 6ஆம் தேதி, மேல்முறையீட்டு நீதிமன்றம் செவிமடுக்கவுள்ளது.

இதனிடையே, அம்னோ தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடிக்கும் ஜ.செ.க தலைவர் லிம் குவான் இன்ஜிற்கும் இடையில் எழுந்திருக்கும் கருத்து வேறுபாடு, பிரச்சனை ஒரு சிறிய விவகாரமே என்று டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்துள்ளார்.

''குவான் எங் விவகாரத்தில் நாங்கள் அமைதியாகி விட்டோம். பிரச்சனை இல்லை. சிறு அறிக்கை வெளியிடுவது பரவாயில்லை, '' என்றார் அவர்.

ஒருமைப்பாட்டு அரசாங்கத்தை உருவாக்குவதில் உடன் இருந்த அம்னோவை புண்படுத்த வேண்டாம் என்று லிம்மிற்கு நினைவுறுத்திய டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட்டின் அறிக்கை குறித்து கருத்துரைக்கும் போது பிரதமர் அவ்வாறு குறிப்பிட்டார்.

டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு ஆதரவளிக்கும் பேரணி உட்பட எந்தவொரு நிகழ்ச்சியிலும் எதிர்கட்சி குறிப்பாக, பாஸ் உடன் கைகோர்ப்பது ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் அம்னோவின் அரசியல் நிலைத்தன்மை மற்றும் நிலை தொடர்பாக குழப்பத்தை ஏற்படுத்தும் என்று லிம் முன்னதாக நினைவுறுத்தியிருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)