பொது

நஜிப் வீட்டுக் காவல் விவகாரம் குறித்து எவரும் விவாதிக்கக்கூடாது; தடை உத்தரவை அரசாங்கம் கோரும்

13/01/2025 05:35 PM

கோலாலம்பூர், 13 ஜனவரி (பெர்னாமா) -- தமக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையின் மீதமுள்ள ஆறு ஆண்டு காலத்தை வீட்டுக் காவலில் அனுபவிக்கும் வகையில் முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பித்தது குறித்து,

எந்தத் தரப்பினரும் விவாதிக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அதற்கான தடை உத்தரவைக் கோரி அரசாங்கம் விண்ணப்பம் ஒன்றைத் தாக்கல் செய்யவுள்ளது.

இது உணர்வுப்பூர்வமான விவகாரத்தை உட்படுத்தி இருப்பதால் இந்த விண்ணப்பம் செய்யப்படுவதாக அரசாங்கத்தையும் மேலும் ஆறு பிரதிவாதிகளையும் பிரதிநிதிக்கும் கூட்டரசு மூத்த வழக்கறிஞர் ஷம்சுல் போல்ஹாசன் தெரிவித்தார்.

நீதிபதி ஹயாத்துல் அக்மர் அப்துல் அசிஸ் முன்னிலையில் நடத்தப்பட்ட இவ்வழக்கின் விசாரணையின்போது இது முன்வைக்கப்பட்டதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் அதனைக் கூறினார்.

இவ்விண்ணப்பத்தை ஜனவரி 20ஆம் தேதி தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் e-Review எனப்படும் இணையம் வாயிலாக நீதித்துறை மறுஆய்வு வழக்கின் நிர்வகிப்பை மார்ச் 11ஆம் தேதிக்கு நிர்ணயித்தது.

எனவே, இதற்கான பதில் பிரமாணப் பத்திரத்தை நஜிப் ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்படிப்பதாக ஷம்சுல் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)