புத்ராஜெயா, 03 ஜனவரி (பெர்னாமா) -- இவ்வாண்டில், ஆசியானிற்கு மலேசியா தலைமையேற்பதால் நாட்டிற்கு குறிப்பாக பொருளாதார நடவடிக்கைக்கு அது நேர்மறையான தாக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்வழி, மக்களுக்குக் குறிப்பாக ஆசியான் கூட்டங்கள் நடைபெறும் ஒவ்வொரு மாநிலத்திலும், தங்கும் விடுதி மற்றும் சுற்றுலா போன்றவற்றில் பொருளாதார வளர்ச்சி காணப்படும் என்று தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
இவ்வாண்டு முழுவதும் குறிப்பாக மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் ஆசியான் உச்சநிலை மாநாடு உட்பட பல்வேறு நிலைகளில் சுமார் 323 ஆசியான் கூட்டங்களுக்கு மலேசியா தலைமை தாங்கவிருப்பதாக ஒருமைப்பாட்டு அரசாங்கப் பேச்சாளருமான ஃபஹ்மி கூறினார்.
''நிச்சயம், ஆசியான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் வருகை புரிவார்கள். வளைகுடா ஒத்துழைப்பு நாடுகள் அல்லது ஜிசிசி-ஐயும், ஆசியான் உரையாடல் பங்காளிகள் அனைவரும் வருகை புரிவார்கள். அவர்கள் உள்நாட்டுப் பொருள்களை வாங்குவார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம்'', என்று அவர் கூறினார்.
இன்று, புத்ராஜெயாவில், தொடர்பு அமைச்சின் ஊழியர்களுடன் பிரதமர் துறையின் மாதந்திரக் கூட்டத்தில் பிரதமர் வழங்கிய உரையை நேரலையாக கண்டப் பின்னர் பெர்னாமா செய்திகளிடம் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
ஆசியான் கூட்டத்தை ஏற்பாடு செய்யும் ஒவ்வொரு அமைச்சும் உள்ளூர் கைவினைப் பொருள்களை நினைவுப் பரிசாக வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டதை ஃபஹ்மி சுட்டிக் காட்டினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)