பொது

நாளைய பேரணியில் கலந்து கொள்ளாதீர்; பொதுமக்களுக்கு பி.டி.ஆர்.எம் அறிவுறுத்து

05/01/2025 05:42 PM

புத்ராஜெயா, 05 ஜனவரி (பெர்னாமா) --   புத்ராஜெயா நீதிமன்ற வளாகத்தின் உரிமையாளரிடமிருந்து அனுமதி பெறப்படாத நிலையில், நாளை, அங்கு நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் அமைதி பேரணியில் கலந்துகொள்ள வேண்டாம் என்று அரச மலேசிய போலீஸ் படை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அது நடப்பில் உள்ள சட்டத்திற்குப் புறம்பான செயல் என்பதால் அதனை மீறி அப்பேரணியில் பங்கேற்கும் நபருக்கு எதிராக பி.டி.ஆர்.எம் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று புத்ராஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஐடி ஷாம் முஹமட் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

2012-ஆம் ஆண்டு அமைதி பேரணி சட்டத்தில் உள்ள விதிகளையும் அப்பேரணி பின்பற்றாததால் அதில் கலந்துகொள்ள வேண்டாம் என்று ஏசிபி ஐடி ஷாம் பொதுமக்களுக்கு வலியுறுத்தினார்.

இதனிடையே, நாளை புத்ராஜெயாவிற்குச் செல்லும் சில சாலைகளில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருப்பதோடு கடுமையான பரிசோதனையும் நடத்தப்படும்.

நாளை நடத்தப்படும் பேரணியில் தேவையற்ற வாசகங்கள் கொண்ட பதாகைகள் உட்பட ஆயுதங்கள் எதுவும் இல்லாததை உறுதி செய்வதே இந்த பரிசோதனையின் நோக்கம் என்று அவர் விவரித்தார்.

நாளை எந்தவொரு பேரணியும் நடத்தப்படக்கூடாது என்ற நோக்கத்துடன் நீதிமன்ற வளாகத்தில் வேலி பொருத்தப்பட்டிருப்பது இன்று பெர்னாமா மேற்கொண்ட கண்ணோட்டத்தில் தெரியவந்துள்ளது.

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கான ஆதரவு பேரணிக்கு மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்தை, பி.டி.ஆர்.எம் நிராகரித்ததாக நேற்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)