கோலாலம்பூர், 05 ஜனவரி (பெர்னாமா) -- தற்காப்பு அமைச்சின் கீழ் செயல்படும் நிறுவனங்களில் நிகழும் துன்புறுத்தல் தொடர்பான சம்பவங்களில் அவ்வமைச்சு சமரசம் செய்து கொள்ளாது.
துன்புறத்தல் தொடர்பான எந்தவொரு குற்றச்சாட்டும் விசாரிக்கப்படுவதோடு அதில் தீவிர கவனம் செலுத்தப்படும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் தெரிவித்தார்.
சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் பெர்னாமா தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.
நாட்டின் தலைநகரில் உள்ள இராணுவ நிறுவனங்களில் மாணவர்கள் துன்புறத்தப்படுவது மற்றும் அதிகப்படியான பகடிவதைக்கு ஆளாவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் கேள்வி எழுப்பிய போது முஹமட் காலிட் அவ்வாறு பதிலளித்தார்.
இராணுவ நிறுவனங்களில் பல மாணவர்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பகடிவதை சம்பவம் நிகழ்ந்துள்ளதாக, சம்பந்தப்பட்ட அந்த நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த ஜனவரி மூன்றாம் தேதி தமது முகநூலில் பதிவிட்டிருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)