புத்ராஜெயா, 04 ஜனவரி (பெர்னாமா) - மலேசியாவில் கொவிட்-19 பெருந்தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் கொவிட்-19 நோய் சம்பவங்களில் அதிகரிப்பு இல்லை என்றும், 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி இந்நோயினால் மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்திருக்கிறது.
மேலும், நாட்டில் புதிய உருமாறியத் தொற்று சம்பவங்கள் எதும் பதிவாகவில்லை என்றும் அமைச்சு கூறியுள்ளது.
2023ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட இரண்டு லட்சத்து 2,962 கொவிட்19 நோய் சம்பவங்களுடன் ஒப்பிடும்போது 2024ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 666 நோய் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கொவிட்-19 நோய் காரணமாக 2023ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 441 மரணங்களை காட்டிலும் கடந்த ஆண்டில் 57 மரணங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, இன்ஃப்ளூவென்சா ஏ நோய் சம்பவங்களும், 2024ஆம் ஆண்டில் 61 விழுக்காடு சரிவு கண்டுள்ளது.
2023-ஆம் ஆண்டில் இன்ஃப்ளூயன்ஸா ஏ நோய் சம்பவங்கள் 66 விழுக்காடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதனிடையே, 2024-ஆம் ஆண்டு முழுவதிலும் 327 பேருக்கு 'ஹியுமன் மெட்டாப்நிமோவைரஸ்' (hMPV) நோய்க் கண்டிருப்பதைச் சுகாதார அமைச்சு அடையாளம் கண்டுள்ளது.
2023ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட 225 சம்பவங்களைக் காட்டிலும் இது அதிகமாகும்.
hMPV நோய் ஒரு வகையான சுவாசக் குழாய் தொற்று ஆகும்.
இது மலேசியாவில் புதிய நோய் அல்ல.
1998ஆம் ஆண்டு தொற்று நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சட்டம், சட்டம் 342இன் படி hMPV தொற்று குறித்து புகாரளிக்கவோ அல்லது தகவல் தெரிவிக்கவோ தேவையில்லை.
எனினும், பொதுமக்கள் தங்கள் உடல் நலத்தில் அக்கறையுடன் செயல்படவும் மற்றவர்களுக்குத் தொற்று பரவாமல் தடுக்கவும் குறிப்பாக நெரிசலான பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)