பொது

பள்ளதாக்கில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலி

04/01/2025 06:03 PM

குவாந்தான், 04 ஜனவரி (பெர்னாமா) - சனிக்கிழமையன்று மாரான் ஃபெல்டா நெரெக் அருகே உள்ள கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலையில் 152.4ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த சாலை விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்த வேளை மேலும் இருவர் காயங்களுக்கு ஆளாகினர்.

அவர்கள் பயணித்த நிசான் அல்மேரா ரக கார் 20 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

சம்பவம் தொடர்பாக தங்களுக்குக் காலை மணி 11.07 அளவில் அழைப்பு வந்ததாக பஹாங் மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, ஜே.பி.பி.எம்மின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து மாரான் மற்றும் தெமெர்லோவில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களின் 16 உறுப்பினர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்தனர்.

மீட்பு உபகரணங்களைப் பயன்படுத்தி காரில் சிக்கிக் கொண்டிருந்த நான்கு பெண்களையும் தீயணைப்புப் படையினர் காப்பாற்றினர்.

இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள வேளையில் பலத்த காயத்திற்குள்ளான இருவர் சிகிச்சைக்காக தெமெர்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பரிசோதனைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)