சிப்பாங், 11 ஜனவரி (பெர்னாமா) -- மலேசியாவில் இருந்து வெளியேறுவதற்கான செயல்முறையை எளிதாக்க, MyBorderPass செயலி வழி QR எனப்படும் விரைவு பதில் குறியீட்டை பயன்படுத்தும் சேவை, ஆசியான் பயணிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
நாட்டின் முதன்மை நுழைவாயிலில், நுழைவு மற்றும் வெளியேறும் செயல் முறையை குடிநுழைவுத்துறை சுமுகமாக்குவதை உறுதிசெய்ய, இவ்வாண்டில் ஆசியான் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் மலேசியாவிற்குக் கடப்பாடு உள்ளதை உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் சுட்டிக்காட்டினார்.
''இது நமது முயற்சியாகும். இவ்வாண்டு நாம் அதிகாரிகள், மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் நாட்டின் தலைவர்கள் அளவில் 400 கூட்டங்களை ஏற்று நடத்தவிருக்கிறோம். இவ்வாண்டு நாம் மலேசிய மக்களுக்காகத் தொடங்கவிருக்கிறோம். ஆனால், அடுத்த ஆண்டில் ஆசியான் நாடுகளுக்காக நாம் தொடர்ந்து முன்னோக்கிச் செயல்படவுள்ளோம். அவர்கள் நுழைவதற்கு வழக்கமான செயல்முறையைப் பயன்படுத்துவர். ஆனால், வெளியேறுவதற்கு நமது வழியை அதாவது QR குறியீட்டைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவர்,'' என்று அவர் கூறினார்.
இன்று, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், KLIA-வின், முதலாவது முனையத்தில், MyBorderPass QR குறியீட்டு வாயிலையும் Smart Q அமைப்பையும் பார்வையிட்ட பின்னர் சைஃபுடின் அவ்வாறு தெரிவித்தார்.
கே.எல்.ஐ.ஏ 1 மற்றும் 2 வழியாக நாட்டில் நுழைவது மற்றும் வெளியேறுவதற்கான செயல்முறைகளுக்கு QR குறியீடு, தற்போது மலேசியர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
இதுவரை, QR குறியீட்டைக் கொண்ட தானியங்கி வாயில்கள் கே.எல்.ஐ.ஏ 1-இல் 20 மற்றும் கே.எல்.ஐ.ஏ 2-இல் 20 என்று மொத்தம் 40 பொருத்தப்பட்டுள்ளன.
அதைப் பொருத்துவதற்கான மொத்த செலவு ஒரு கோடியே 92 லட்சம் ரிங்கிட்டாகும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)